போதைக்கு அடிமையானவர்கள் இனி வீட்டுக்காவலில்!

போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு, நன்னடத்தை அதிகாரிகளால் புனர்வாழ்வளிக்கப்படுவார்கள் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார்.

65 வீதமான கைதிகள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களாக இருப்பதால் அவர்களை சிறைச்சாலைகளில் புனர்வாழ்வளிக்க முடியாது என பல்லேகல வெளி சிறை முகாமில் நேற்று ஆய்வுச் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டபோது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தினால் விதிக்கப்படும் தண்டனைக்கு உட்பட்டு அவர்களுக்கு புனர்வாழ்வளிக்க பயனுள்ள பொறிமுறையொன்று இனி கையாளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவின்றி, போதைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் வகையில் புனர்வாழ்வுச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் எனவும், கம்பளையில் புதிய புனர்வாழ்வு நிலையமொன்றை ஸ்தாபிக்க திட்டமிட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நீதித்துறை சேவை ஆணையத்தின் பரிந்துரைக்கு உட்பட்ட, இது தொடர்பிலான திட்டம், சட்ட வரைவாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், இதன் மேலதிக பணிகளுக்கு நீதியமைச்சரால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மாணவர் இயக்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் தொடர் பிரச்சாரம் குறித்து ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், ”நாட்டின் பொருளாதாரத்தை முடக்க முயற்சிக்கும் எந்தவொரு இயக்கத்தையும் ஒடுக்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். மாணவர் இயக்கங்கள் மற்றும் தொழிற்சங்க இயக்கங்கள் என்ற பெயரில் ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் பொருளாதாரத்திற்கான முக்கியத்துவத்தை முடக்க முயற்சிப்பதாகவும், அவற்றை பயங்கரவாத இயக்கங்களாகவே கருத வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

போதைக்கு அடிமையானவர்கள் இனி வீட்டுக்காவலில்!

Social Share

Leave a Reply