ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் உருவான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 25ம் திகதி தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த திரைப்படத்தில் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்த ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றதோடு, யூ டியூப்யிலும் அதிக பார்வையாளர்களை தன்வசப்படுத்தியிருந்தது, மேலும் தற்போது இந்த ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது.
இந்த வெற்றிக்கு ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “எங்களை பெருமைப்படுத்தியதற்காகவும் இந்திய சினிமாவுக்கான கோல்டன் குளோப் விருதை பெற்று தந்ததற்காகவும் கீரவாணி மற்றும் ராஜமௌலிக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் இந்திய பிரதமர் மோடி, உலகநாயகன் கமல்ஹாசன் என பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
