பொரளை தனியார் வைத்தியசாலையொன்றில் சிறுநீரக கடத்தல் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர்கள் இருவர் மற்றும் பிரதான தரகர்கள் இருவரையும் எதிர்வரும் 31ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (17.01) உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட கிராம சேவகர் ஒருவர், வெளிநாட்டவர் ஒருவருக்கு தாம் இந்நாட்டில் வசிப்பவர் என்பதை உறுதிப்படுத்தும் கிராம உத்தியோகபூர்வ சான்றிதழை தயாரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அண்மையில் பொரளையில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் வறியவர்களுக்கு பணம் வழங்குவதாக வாக்குறுதியளிக்கப்பட்ட சிறுநீரகக் கடத்தல் நடவடிக்கை தொடர்பிலான தகவல்கள் வெளியாகியிருந்தது.
இதன் பின்னர், சம்பவத்தின் பிரதான தரகரான பாய் என்பவர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதோடு, மற்றுமொரு தரகர் கடந்த 16ம் திகதி பிற்பகல் கைது செய்யப்பட்டார்.
மேலும், இருவருக்கு போலி சான்றிதழ் வழங்கி சிறுநீரக கடத்தல்காரர்களுக்கு ஆதரவளித்த குற்றச்சாட்டில், கொலன்னாவ தம்மபுர மற்றும் ராஜகிரிய ஆகிய இரண்டு கிராமசேவகர் களங்களின் கிராம உத்தியோகத்தர்கள் இருவரையும் குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர்.
சமன் பெரேரா மற்றும் உபுல் இந்திரஜித் எனும் இரு கிராம உத்தியோகத்தர்களும் சிறுநீரகத்தை வழங்கியவருக்கும் அதனை பெற்றுக்கொள்ளும் நபருக்கும் சட்டவிரோதமான முறையில் கிராம உத்தியோகபூர்வ சான்றிதழ்களை வழங்கியுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு சார்பில் ஆஜரான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், குடியுரிமைச் சான்றாக அபுதாபியைச் சேர்ந்த அஹ்மத் அல் குபேனி என்பவருக்கு தேசிய அடையாள அட்டை மற்றும் கிராம சேவை சான்றிதழையும் வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு கிராம சேவை சான்றிதழுக்கு இருவரும் தலா ரூ.20 ஆயிரம் பெற்றுக்கொண்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
பொரளையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்த சஃப்ரான் என்பவரால் ஒருங்கிணைக்கப்பட்டதாகவும் அவர் தற்போது நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சிறுநீரக மாற்று சாத்திரசிகிச்சைகளை மேற்கொண்ட வைத்தியர்களும் தலைமறைவாகியுள்ளனர்.
இந்த வழக்கில் பலர் தொடர்புபட்டிருப்பதாகவும் இதன் விசாரணைகள் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மைகளை பரிசீலித்த மேலதிக நீதவான், கிராம உத்தியோகத்தர்கள் இருவர் உட்பட சந்தேகநபர்களை எதிர்வரும் 31ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.