இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) உயர்தரப் பரீட்சையின் போது மின்சார பாவனையைக் குறைக்க உதவுமாறு அனைத்து மின்சார பாவனையாளர்களுக்கு, அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் பொது வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கோரிக்கையை ஏற்குமாறும் பரீட்சையின் போது மற்றும் இரவு நேரங்களில் பரீட்சார்த்திகள் சிரமப்படுவார்கள் என்பதால் மின்சாரம் தடைபடாதவாறு நடவடிக்கை எடுக்குமாறும் அறிவித்துள்ளதாக ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இடையூறு இன்றி மின்சார விநியோகத்தை வழங்கி உதவுமாறு இலங்கை மின்சார சபைக்கு (CEB) பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.
எவ்வாறாயினும், PUCSL விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மின்சார சபை அறிவித்துள்ளது.
எனவே, மாணவர்களின் நலன் கருதி பரீட்சையின் போது மின்சார விநியோகத்தை குறைக்க உதவுமாறு அனைத்து மின்சார பாவனையாளர்கள், பொது மற்றும் தனியார் நிறுவனங்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
குறிப்பாக பரீட்சை நடைபெற்றுக்கொண்டிருக்கும் நேரங்களின்போது குளிரூட்டிகளின் பயன்பாட்டைக் குறைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

