இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையில் உருவாகி, எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ‘ஆர்.ஆர்.ஆர்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு..’ பாடல் ஒஸ்கார் விருதினை பெறுவதற்கான இறுதிப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.
தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகர்களான ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஆர்.ஆர்.ஆர்’ எனும் திரைப்படத்தில் ‘நாட்டு நாட்டு…’ எனும் நாட்டுக்குத்து பாடல் அண்மையில் கோல்டன் க்ளோப் விருதினை வென்று புதிய சாதனை படைத்தது.
மேலும் இந்தப் பாடல் வெளியான நாளிலிருந்து இதுவரை அதிக பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்துவருகிறது.
இந்நிலையில் திரையுலகின் உச்சபட்ச கௌரவமாக கருதப்படும் ஒஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்தப் பாடல், இந்த விருதுக்காக தெரிவாகும் இறுதிப் பட்டியலிலும் இடம்பிடித்திருக்கிறது.
இறுதிப் பட்டியலில் இடம்பிடித்த ஆறு பாடல்களில் ஒரு பாடலாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் ‘ஆர்.ஆர்.ஆர்’ பாடலுக்கு அசல் பாடல் எனும் பிரிவில் ஒஸ்கர் விருது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பையும் அதிகரித்து வருகிறது.

