தம்புள்ளையில் உள்ள பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள் எனவும், அன்று நம் நாட்டு விவசாயிகள் நெற்செய்கை, காய்கறிகள் மற்றும் பிற பயிர்களை பயிரிட்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தாலும், இந்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்தவர்கள் ராஜபக்ச குடும்பத்தின் தலைமையிலான மொட்டுத் திருடர்கள் தான் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று (02.02) தம்புள்ள நகரில் இடம் பெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
விவசாயம் செய்து வாழ்வாதாரம் பெற்ற மக்களை, புதிய தொழில்நுட்பத்தின் மூலம் முன்னோக்கி கொண்டு வந்து, நிலத்தில் இருந்து கிடைக்கும் விளைச்சலை அதிகரிக்க புதிய தொழில் நுட்பங்கள் மற்றும் உள்ளீடுகளை பயன்படுத்தி நவீன தொழில்நுட்பம் மூலம் பலப்படுத்தப்பட்டு, நாட்டின் உணவு உற்பத்தியை உயர் மட்டத்திற்கு கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போதைய நிலையில் இருந்து நாட்டை மீட்பதற்குப் பொருளாதாரப் புரட்சி தேவை எனவும், உற்பத்தித் தொழிற்சாலைகள் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்புத் தொழிற்சாலைகள் இங்கு நிறுவப்பட வேண்டும் எனவும், விவசாயிகளைக் கொண்டு நாட்டின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வது மாத்திரமல்லாது, தரமான விவசாய பயிர்களை ஏற்றுமதி செய்யும் நிலைக்கு கொண்டு வருவதாகவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், தற்போதுள்ள முறையில் உற்பத்தி குறைந்து, விவசாயிக்கு கிடைக்கும் பணத்தின் அளவும் குறைவடைவதால், இந்நாட்டில் விவசாயிகள் வாழும் பிரதேசங்களில் அவர்களின் உற்பத்திப் பொருட்களைப் பாதுகாக்கும் வகையில் குளிர்சாதன களஞ்சிய வசதிகளை ஏற்படுத்த செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
