அத்தியாவசிய அரச சேவைகளுக்கு மட்டுமே பணத்தை வழங்க வேண்டுமென நிதியமைச்சரானா ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க திறைசேரி செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார். மக்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் முகமாக இந்த அறிவிப்பு விடப்பட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார நிலைமை சீராகும் வரை மக்கள் சேவைகளை சீராக வழங்குமாறும் பணிக்கப்பட்டுள்ளது,
இந்த அறிவிப்பின் மூலம் தேர்தல் செலவினங்களுக்கான பணம் வழங்கப்படுவதில் தாமதம் ஏற்படும் வாய்ப்புகளுள்ளன. அவ்வாறன நிலை ஏற்பட்டால் தேர்தல் பின் செல்லும் வாய்ப்புகளுமுள்ளன. ஏற்கனவே தேர்தல் நடைபெறுமா இல்லையா என்ற குழப்பம் நிலவி வருகின்றது.
சம்பளம், கடன் சேவைகள், மருத்துவ விநியோகம், ஓய்வூதியம், குறைந்த வருமானம் உடைய குடும்பங்களுக்கான உதவிகள், புலைமைப்பரிசில்கள், விவசாயிகள் ஓய்வூதியம், பாடசலை சத்துணவு திட்டம், போர் வீரர்கள் மற்றும் விசேட தேவைக்குடைய படையினருக்கான கொடுப்பனவுகள், வைத்தியசாலை மற்றும் சிறைச்சாலைகளுக்கான உணவு விநியோகம் போன்றனவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவுள்ளது.
இந்த நடவடிக்கை பொருளாதரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அதேவேளை, பணம் முறைகேடாக பாவிப்பதனை தடுக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைகளுக்காக பணம் வழங்க வேண்டிய நிலையில் காணப்படுவதனால் வேறு செலவினங்களுக்கு பணத்தை வழங்குவது மக்கள் மத்தியில் எதிர்மறையான தகக்கத்தை ஏற்படுத்தும் எனவும், அது பொருளாதர அபிவிருத்திக்கு பின்னடைவை ஏற்படுத்துமெனவும் திறைசேரி தெரிவித்துள்ளது.