தேர்தல் செலவினங்களுக்காக பெப்ரவரி மாதத்தில் 770 மில்லியன் ரூபா கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் 100 மில்லியன் ரூபா மட்டுமே திறைசேரியினால் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் கோரிய பணத்தினை வழங்காவிட்டால் உயர் நீதிமன்றத்தில் முறையிடவேண்டி வருமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிஹால் புஞ்சிஹேவா(12.02) நேற்று தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்கான தேர்தல் செலவினங்களுக்காக 10 பில்லியன் ரூபா பாதீடு மூலமாக பாரளுமன்றத்தில் விசேட வாக்களிப்பினூடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் தேர்தலை நடாத்துவதற்கு 3 பில்லியன் ரூபா குறைந்த பட்சம் தேவைப்படுவதாகவும், பண ஒதுக்கீடு குறைவாக காணப்படுவதனால் தேர்தல்கள் ஆணைக்குழு சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
உயர் நீதிமன்றம் தேர்தலை நடாத்த முடியுமென தெரிவித்துள்ள நிலையில், வெளி அமைப்புகளிலிருந்தோ, வேறு வழிகளிலோ பணத்தினை பெற்றுக் கொள்ள முடியாது எனவும், சுயாதீனமானதும், நேர்மையானதுமான தேர்தலை நடாத்துவதற்கு திறைசேரி மற்றும் நிதியமைச்சுகள் தவறுகின்றமை சட்ட மீறல் எனவும் புஞ்சிஹேவா கூறியுள்ளார்.
