அடுத்த ஆண்டு பாடத்திட்டங்களில் மாற்றம்!

எதிர்வரும் 2024ம் ஆண்டு முதல் தரம் 6 முதல் தரம் 13 வரையான அனைத்து தரங்களின் பாடத்திட்டத்தை புதுப்பித்து தரம் 8 இல் செயற்கை நுண்ணறிவை கற்பிக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இரண்டாவது தடவையாக நடைபெற்ற Huawei தகவல் தொழில்நுட்ப (ICT) போட்டியின் பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டபோதே கல்வி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவு பாடம் விருப்பப் பாடமாகவோ அல்லது பாடத்திட்டத்திலோ சேர்க்கப்படும் என்றும், தகவல் தொழில்நுட்ப பாடத்துடன் அந்த பாடத்தையும் மாணவர்கள் படிக்க வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்நாட்டு இளைஞர்களின் எதிர்காலமானது, தொழில்நுட்ப வளர்ச்சியில் தங்கியிருப்பதால், உயர்கல்வியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளை அதிகரிக்க வேண்டும் என்றும், கிராமப்புறங்களில் உள்ள பாடசாலைகளுக்கு அறிவியல் மற்றும் கணித பாடப்பிரிவுகள் வழங்கப்பட வேண்டும் என்றும் போதிய அளவு ஆசிரியர்கள் பணிக்கு ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தொழில்நுட்பத் துறையில் எம்மைப் போன்ற அதே மட்டத்தில் உள்ள நாடுகள் தற்போது எம்மை விட 10 வருடங்கள் முன்னிலையில் உள்ளதாகவும், 21ம் நூற்றாண்டின் 3ம் தசாப்தத்தில் இருந்து 20ம் நூற்றாண்டிற்கு மீண்டும் செல்ல முடியாது எனவே அடுத்த ஐந்தாண்டுகளில் இதனை கட்டாயக் கல்வியாக மாற்ற வேண்டும் எனவும், கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு பாடத்திட்டங்களில் மாற்றம்!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply