சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் T20 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கட் தொடரின் இரண்டாவது போட்டியிலும் இலங்கை அணி வெற்றி பெற்றது. பங்களாதேஷ் அணியுடன் நடைபெற்ற போட்டியில் 7 விக்கெட்களினால் வெற்றி பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 08 விக்கெட்களை இழந்து 126 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. ஒஷாதி ரணசிங்க மற்றும் சாமரி அத்தப்பத்துவின் சிறப்பான பந்துவீச்சின் மூலம் பங்களாதேஷ் அணியினை கட்டுப்படுத்த முடிந்தது. கடந்த போட்டியிலும் தென்னாபிரிக்கா அணியை 126 ஓட்டங்களுக்கே இலங்கை அணி கட்டுப்படுத்தியது.
பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டத்தில் சோபனா மொஸ்ட்ரே 29 ஒட்டங்களையும், நிகர் சுல்தானா 28 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் ஒஷாதி ரணசிங்க 03 விக்கெட்களையும், சாமரி அத்தப்பத்து 02 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி ஹர்சிதா சமரவிக்ரம வழங்கிய மிக அபாரமான ஆரம்ப துடுப்பாட்டம் மூலம் 18.2 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 129 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. ஹர்சிதா 50 பந்துகளில் 69 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுகொடுத்தார். இலங்கை அணி மூன்று விக்கெட்களை அடுத்தடுத்து இழந்தது தடுமாறிய வேளையில் நிலக்ஷி டி சில்வா ஆட்டமிழக்காமல் 41 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். இருவரும் 104 ஓட்டங்களை நான்காவது விக்கெட் இணைப்பாட்டமாக பெற்றுக் கொடுத்தார்கள். வீழ்த்தப்பட்ட மூன்று விக்கெட்களையும் மறுபா அக்தர் கைப்பற்றினார்.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி அரை இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்படுவதற்கான மிகவும் சிறப்பான வாய்ப்பு கிடைத்துள்ளது. மீதமுள்ள இரண்டு போட்டிகளில் ஒன்றை இலங்கை அணி வெற்றி பெற்றால் அரை இறுதிப் போட்டிகுத் தெரிவாகிவிடலாம்.
