சென்னையில் இன்று சிறு நில அதிர்வு உணரப்பட்டதாகவும், அலுவலக கட்டிடங்களிலிருந்த பணியாளர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறியதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், இந்த அதிர்வு தொடர்பில் இதுவரையில் உத்தியோகபூர்வமான எந்த தகவலும் வெளியாகவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவை தொடர்ந்து இந்தியாவிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளரான பூர்ணசந்திர ராவ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் இமயமலை பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அதனை முன்கூட்டியே கணிக்கக்கூடிய வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
பூமியின் மேற்பரப்பில் உள்ள இந்திய தட்டு வருடத்திற்கு சுமார் 5 செ.மீ நகர்வதாகவும், இதனால் இமயமலையில் அழுத்தம் குவிந்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.” என தெரிவித்துள்ளார்.
இமாச்சல், நேபாளத்தின் மேற்கு பகுதி மற்றும் உத்தரகாண்ட் பகுதிகளில் எந்த நேரத்திலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக சிறிய அளவில் அவ்வப்போது நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
