ட்ரையிலரை “திருப்பி” பார்க்க வைத்த குறும்புக்காரர்கள், Public bites எடுத்து கொஞ்சம் யோசிக்க வைச்சாங்க. மாலை நேர ரிலீஸ் நேரத்தை காலை நேரத்துக்கு மாற்றியதும் நல்ல ட்ரிக்ஸ். – புலத்தின் ரிவியூஸ்தான் இப்போது படங்களின் வாழ்காலத்தை தீர்மானிக்கிறது என்பது சமூக வலைத்தளங்களை சரியாக கணித்தவனுக்கு நன்றாகவே தெரியும். ட்ரிக்ஸ் கைகொடுத்திருக்கிறது. ஊர் பாராட்டி – உள்ளூர் பாராட்டுகிறது.
துஷி, ரிஷி என்ற யாழின் திறமைமிகு தொழில்நுட்ப கலைஞர்களின் அனுபவம் ஜீவா என்ற புதுமுக இயக்குனருக்கு கிடைத்த பெரு நம்பிக்கை.
துஷி: சினிமாவோ, ஜனரஞ்சக ஊடகமோ எதுவாக இருந்தாலும் சுயமாக கற்று, பயிற்சியோடு ஒரு தலைமுறை உருவாக வேண்டுமென உழைத்துக்கொண்டிருப்பவர். அந்த பாதையில் இப்போது நாட்டு நிலைகளால் தடங்கல்களும் வேறு.
ரிஷி: யாழின் திறமையான, அழகியலான ஒரு அற்புத ஒளிப்பதிவாளன். அவனுடைய பாணியில் அவனுக்கு ஒரு படைப்பு இது.
ரெஜி: ட்ரோன் வழி காட்சிகளில் கை தேர்ந்தவன்.
ஜீவா: யதார்த்தவாதி, கலகலப்புக்கு பஞ்சமில்லா மனிதர். ரஜனி ரசிகர். இது முதல் முயற்சி என்றாலும் தான் நினைத்ததை செய்ய முதல் அதில் ஞானத்தை பெற நினைத்து அதை தேடி கற்று, கிடைத்த வளங்களையும் திறமையாளர்களையும் சரியாக பயன்படுத்தியதுதான் அவருக்கான “ஜனரஞ்சக இயக்குனர்” க்ரடிட்.
நல்ல திறமைகள் சேர்ந்து ஒரே கோணத்தில் உழைக்கும்போது இப்படியான படைப்புகள் உயிர்பெறும்.
20 நிமிட குறும்படங்களை forward செய்து பார்த்தவர்களுக்கு அதற்கு வேலையில்லாமல் ஒரு குறும்படத்தை தருவதுதான் நல்ல குழுவின் வேலை. அதுதான் இதிலும் நடந்திருக்கு.
பாசையூர் குருநகரை வைத்து வடசென்னை போல ஒரு படமே செய்யலாம் என அந்தப்படம் வந்தபோது சொன்ன நினைவு. பாசையூர் கலைக்கான ஊர். களமாகவும் அழகான ஊர்.
நாட்டுக்கூத்தோடு வளர்ந்த ஊர்.
யாழின் மொழி நடையில் அவர்களுக்கென தனி நடையுண்டு. சைக்கிளை சக்கிள் என சொல்வார்கள். அது இதில் மிஸ் ஆகிட்டு. பெரிய படைப்பில் சேர்த்திடுங்கோ.
இதன் நடிகர்கள் + இதர கலைஞர்கள், நீண்டகால சிறு சிறு படைப்புகளால் பயிற்சிபெற்று வளர்ந்தவர்கள். இப்போது கிடைக்கும் பாராட்டுகள் அவர்களுக்கு பொருத்தமானவை.
கண்ணாடிக்காரனுக்கு மட்டும் தனிப்பாராட்டு. அவனில்லையேல் இதன் வெற்றி சாத்தியமில்லை.
இந்த படைப்பின் நீட்சி உருவாகிறது என்றால் குருநகர் பாசையூரின் வாழ்வியல் இன்னும் அழகியலாக வெளி உலகுக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
2009 – 2023 : இந்த இடைவெளி சரியான கலைஞர்களை கடைந்தெடுத்து வளமாக்கி வைத்திருக்கு. அவர்களால் இந்த சினிமா பயணம் இனி நல்லதாகவே அமையும்.
-ஜனகன் சிவஞானம்-
இந்தப் படம் வழமையான பாணியிலான படங்களிலிருந்து விலகி நிற்கிறது. வழமையான இலங்கை தமிழ் சினிமாவின் சில நியதிகளை உடைத்துள்ளது. பார்க்கும் போது மனதுக்குள் ஒரு புன் சிரிப்போடு படம் நகர்ந்து செல்கிறது. இறுதி ட்விஸ்ட் வசனம் தான் படத்தின் ஹீரோ. இந்திய சினிமா நகைச்சுவை நடிகர்களுக்கு ஈடுகொடுத்து நடித்துள்ளார் கண்ணாடியோடு வந்து கலக்கிய நகைச்சுவை ஹீரோ.
படத்தில் அங்கங்கே சில குறைகள் காணப்படாமல் இல்லை. இவை எல்லாவற்றையும் தாண்டியே வளர்ந்து வர வேண்டும். இலங்கையின் சினிமா குழந்தை வடிவிலேயே காணப்படுகிறது. பிழைகளின்றி “அ” எழுதும் குழைந்தை அச்சடித்தாற் போல் எழுதாது.
படத்தின் கரு, தொழில் நுட்ப கலைஞர்கள் அதிகம் பாரட்டப்பட வேண்டியவர்கள். முக்கிய காதாபாத்திரங்களில் நடித்தவர்களை விட சிறு பாத்திரங்களில் வருகின்றவர்கள் நன்றாக நடித்துள்ளனர்.
திரைப்படம் தொடர்பில் ஜனகன் சிவஞானம் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த தகவல்கள் சிறப்பாக அமைந்திருந்த காரணத்தினால் அவற்றை இங்கே பாவித்துள்ளோம். நன்றி ஜனகன்.