யாழ் குடிநீர் திட்டங்கள் ஆரம்பம்

யாழ்ப்பாணத்தின், நயினாதீவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை இன்று(06.10) மக்கள் பாவனைக்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திறந்து வைத்தார். யாழ்ப்பாணத்தில் இதுவரை காணப்பட்ட குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் யாழ். நகர நீர் குழாய் அமைப்பு மற்றும் தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றின் நிர்மாணப் பணிகளையும் இன்று (06) முற்பகல் ஆரம்பித்து வைத்தார்.

நயினாதீவில் இடம்பெற்ற நிகழ்வில் அலரி மாளிகையிலிருந்து மெய்நிகர் தொழில்நுட்பம் ஊடாக நேரடியாக பிரதமர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டத்தின் ஊடாக 186 கிராம அலுவலர் பிரிவுகளுக்கு பாதுகாப்பான குழாய் நீரை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதுடன் மத்திய அரசாங்கத்தின் நிதி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் கீழ் இத்திட்டங்கள் செயற்படுத்தப்படும்.

தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஊடாக உயர் தொழில்நுட்ப நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பத்துடன் கடல் நீரை சுத்தமான குடிநீராக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அத்திட்டம் மற்றும் யாழ் நகர நீர் வழங்கல் திட்டத்தின் பாதுகாப்பான நீர் குழாய்களை பொருத்துவதன் மூலம் சுமார் மூன்று இலட்சம் மக்கள் நன்மையடைவதுடன், இந்த திட்டம் 2023ஆம் ஆண்டளவில் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்ட நயினாதீவு கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஊடாக நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு பகுதிகளுக்கான நீர் விநியோகம் முறைப்படுத்தப்படுவதுடன் இதன்மூலம் சுமார் 5000 குடும்பங்கள் நேரடியாக நன்மையடைவர்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் நாயகம் கென்ச்சி யொகுஹாமா அவர்கள் ஸூம் தொழில்நுட்பம் ஊடாக இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு இத்திட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்.

நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லவேர்து, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் கலாநிதி பிரியத் பந்து விக்ரம, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் திரு.நிசாந்த ரணதுங்க உள்ளிட்ட பிரதிநிதிகள் அலரி மாளிகையில் இருந்து காணொளி தொழில்நுட்பம் ஊடாக நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நயினாதீவு நீர் சுத்திகரிப்பு நிலைய திறப்பு விழாவில் கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வழங்கல் கருத்திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த, யாழ். மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணை தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன், வட மாகாண ஆளுநர் திருமதி பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

யாழ் குடிநீர் திட்டங்கள் ஆரம்பம்

Social Share

Leave a Reply