கொரோனா தொற்று பரவலுக்கு பின்னர் முதல் முறையாக, சீனாவின் ஷாங்காய் நகரில் இருந்து சீன சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளது.
நேற்று(10.03) ஷாங்காய் நகரில் இருந்து சைனா ஈஸ்டன் ஏர்லைன்ஸ் எம்.யூ. – 231 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த 181 சீன சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட இந்தக் குழு எதிர்வரும் 7 நாட்களுக்கு இலங்கையின் சுற்றுலா தளங்களை பார்வையிடவுள்ளனர்.
வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhen Hong மற்றும் சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினரும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்திற்கு வருகை தந்து இந்த சுற்றுலா பயணிகள் குழுவை வரவேற்றனர்.
இனிவரும் காலங்களில், சீனாவின் ஷாங்காய் மற்றும் குன்மிங் சர்வதேச விமான நிலையங்களில் இருந்து ஒவ்வொரு வாரமும் சைனா ஈஸ்டன் ஏர்லைன்ஸ் மூலம் சீன சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



