தொழிற்சங்க நடவடிக்கைகள் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளன!

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து எரிபொருள், துறைமுகம், சுகாதாரம், பாடசாலைகள், வங்கிகள், தபால்கள் மற்றும் பிற துறைகளில் உள்ள 40 தொழிற்சங்கங்களினால் நேற்று (15.03) ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.

தொழிற்சங்க நடவடிக்கைகளினால் நேற்று சில துறைகளின் அன்றாட நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டன.

எவ்வாறாயினும், தொழிற்சங்கங்கள் இன்று முதல் தொழில் நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளன. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு இன்று காலை 8.00 மணி முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக அதன் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (16.03) முதல் புகையிரத சேவைகள் வழமைபோல் இயங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக புகையிரத இயந்திர சாரதிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.யு.கொந்தசிங்க தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் சங்கங்களும் இன்று முதல் தமது தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தொழிற்சங்கத்தின் கோரிக்கைகளுக்கு திருப்திகரமான தீர்வுகள் கிடைக்காமையால், தமது தொழிற்சங்க நடவடிக்கையை தொடரவுள்ளதாக பல்கலைக்கழக வைத்தியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு கூடிய தொழிற்சங்க சம்மேளனத்தின் செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதன் தலைவர் பேராசிரியர் ஷியாம் பன்னஹக்க தெரிவித்தார்.

நேற்றைய தின தொழிற்சங்க செயற்பாடுகள் காரணமாக மொத்த தேசிய உற்பத்திக்கு 46 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையினால் ஏற்பட்ட நட்டத்தை ஈடுசெய்வது இலகுவான விடயமல்ல என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார கற்கைகள் பிரிவின் பேராசிரியர் பிரியந்த துனுசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Social Share

Leave a Reply