ரஜரட்ட பல்கலைக்கழகத்துடன் இணைந்த, அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் சிறுவர் நல வைத்தியர்கள் நால்வர் வெளிநாடு சென்றுள்ளமையால் சிறுவர் சிகிச்சை பிரிவு காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வைத்தியசாலையில் சிறுவர் நல பிரிவின் பணியாற்றுவதற்கு வைத்தியர்கள் இல்லாத காரணத்தினால் மூடப்பட்டுள்ளதாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர். டி.எம்.எஸ். சமரவீர வைத்தியசாலை ஊழியர்களுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் நியாயமற்ற வரிக் கொள்கையினால் இப்பிரிவில் பணியாற்றிய நான்கு வைத்தியர்களும் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் அஜந்த ராஜகருணா தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள தொழில் வல்லுனர்களை தக்கவைத்துக் கொள்வதற்கு தேவையான ஏற்பாடுகளை அரசாங்கம் வழங்க முடியாத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சிறுவர் நல மருத்துவ பிரிவு எண் 63 இன் சிகிச்சைகள் மறு அறிவிப்பு வரும் வரை, பிரிவு எண் 24 மற்றும் 25 க்கு தற்காலிகமாக மாற்றப்படும் என்றும் மருத்துவமனையின் பணிப்பாளர் வெளியிட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.