“IMF மற்றும் அதற்கு அப்பால்” – ஜனாதிபதி உரை

இலங்கை முன்னேற இதுவே இறுதிச் சந்தர்ப்பம் எனவும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டாமல், அடுத்த தலைமுறைக்கு வளமான சமுதாயத்தை உருவாக்க ஒன்றிணைவோம் எனவும் “IMF மற்றும் அதற்கு அப்பால்” நிகழ்வில் பிரதம உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரம்சிங்க தெரிவிப்பு.

இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு இதுவே கடைசி சந்தர்ப்பம் எனவும், பரஸ்பரம் குற்றம் சுமத்தாமல் அடுத்த தலைமுறைக்கு சுபீட்சமான சமூகத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறித்த நிகழ்வில் வலியுறுத்தினார்.

கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நேற்று (30.03) முற்பகல் நடைபெற்ற “IMF மற்றும் அதற்கு அப்பால்” கலந்துரையாடலில் பிரதான உரையை ஆற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரதம நிறைவேற்று அதிகாரி கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு அப்பால் சென்று அடுத்த தலைமுறைக்கு வளமான சமூகத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அரசாங்கம் அதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

டி.எஸ். சேனாநாயக்கவின் முன்மொழிவுகளுக்கு அமைய செயற்படாதது மற்றும் 1965 ஆம் ஆண்டு ஷெனோய் அறிக்கையை அமுற்படுத்தாதது உட்பட அபிவிருத்தியை அடைவதற்கான வாய்ப்புகளை இலங்கை தவறவிட்டதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, 1978 இனப்பிரச்சினையால் நாட்டின் முன்னேற்றம் மந்தமடைந்ததாகவும், அதன் மூலம் நாட்டில் மீண்டும் அபிவிருத்திக்கான அடித்தளத்தை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை இழந்ததாகவும் தெரிவித்தார்.

இனப்பிரச்சினையை பிரதான பொருளாதாரப் பிரச்சினையிலிருந்து பிரிக்க முடியாது எனவும், நாடு அபிவிருத்தியடைய வேண்டுமானால் அதற்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறினார்.

பசுமைப் பொருளாதாரத்திற்கான இலங்கையிலுள்ள சாத்தியக்கூறுகள் சாதகமாக உள்ளதாகவும், நாடு அதனை நோக்கிச் செல்வதுடன், விரைவில் டிஜிட்டல் மயமாக்கலை ஆரம்பிப்பதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், ஸ்ரீ லங்கன் மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியன ஏற்கனவே நாட்டின் வளங்களை அதிகம் வீணடித்துள்ளன. அவற்றுக்காக அன்றி, வறியவர் மற்றும் பாதிக்கப்பட்டோரின் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பிற்கு பணம் தேவைப்படுவதாகவும் இங்கு ஜனாதிபதி தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, பாராளுமன்ற உறுப்பினர்களான எரான் விக்கிரமரத்ன, எம்.ஏ. சுமந்திரன், கலாநிதி ஹர்ஷ டி சில்வா, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, , காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன, ஜனாதிபதியின் பொருளாதார ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி மஹிந்த சிறிவர்தன, மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

"IMF மற்றும் அதற்கு அப்பால்" - ஜனாதிபதி உரை

Social Share

Leave a Reply