பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான M.A சுமந்திரன் வயலில் ஏர் பிடித்து உளுததும், நெல் எறிந்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தன. இது போலியான வயல் விதைப்பு எனவும், போலி நாடகம் எனவும், புகைப்படத்துக்காக செய்தவை என்றும் கூட பல கருத்தோட்டங்கள் சமூக வலைத்தளப் பரப்பில் பகிரப்பட்டன.
இந்த விடயங்கள் தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து நடந்த சம்பவங்களை வி தமிழ் தெளிவுபடுத்துகிறது.
“இந்த புகைப்படங்களை பார்த்ததுமே வயல் விதைப்பின் சம்பிரதாயபூர்வமான ஆரம்பம் என ஊகிக்க முடிந்தது. நானும் ஒரு விவசாயி என்ற அடிப்படையில் கடந்த வருடம் முதல் முறையாக வயலில் இறங்கி வயல் விதைத்து ஏதோ முடிந்ததை செய்தேன்.
அந்த அனுபவம் இந்த படங்களை பார்த்ததும், எனக்கு என்னுடைய ஆரம்பத்தை நினைவு படுத்தியது. நான் எடுத்த புகைப்படங்களும் இதே போன்று நகைச்சுவையாகவே இருக்கும்.”
பாரளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் யாரோ ஒருவருடைய அழைப்பையேற்று, நாள் விதைப்பு ஒன்றை செய்திருக்கிறார் என ஊகிக்க முடிந்தது. ஆனால் அது அவருடைய சொந்த வயலின் நாள் விதைப்பு என்பதும், முதற்தடவையாக அவர் விவசாயத்தில் களமிறங்கியுள்ளார் என்பதும் இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்த போது கிடைத்த தகல்வகள்.
பாரளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடைய பூர்வீகக் காணிகளில் தானே முதற் தடவையாக விவசாயத்தை ஆரம்பித்துள்ளார். இது ஒரு நல்ல ஆரம்பம் மற்றும் முன்னுதாரணமும் ஆகும். அத்தோடு இவற்றை
அவருடைய ஜனாதிபதி சட்டத்தரணி நிலையிலிருந்து பார்க்கும் போது விவசாயத்தில் ஈடுபடுவது, முயற்சித்து பார்ப்பது என்பது நல்ல முயற்சி. அதைவிட தற்காலத்தில் விவசாயிகள் மனமுடைந்து, சோர்ந்து போயுள்ள நிலையில் அவர்களை உற்சாகப்படுத்தும் முயற்சியும் கூட.
கொழும்பு, ரோயல் கல்லூரியில் படித்து, ஜனாதிபதி சட்டத்தரணியாக செயற்படும் ஒருவர், பாராளுமன்ற உறுப்பினர், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் என பல பதவிகளில் இருக்கின்ற போதும் விவசாயத்தில் தனது காலை பதிப்பது தமிழ் மக்களின் பூர்வீக தொழிலுக்குள் மீண்டும் பலரை உள்நோக்கி இழுக்கும் செயற்பாடாகவே கருதலாம். அத்தோடு, இவரை பின்பற்றி பலர் விவசாய களத்தில் இறங்கும் வாய்ப்புகளுமுள்ளன.
இந்த புகைப்பட விடயங்களில் இருக்கும் அம்சங்கள் பலருக்கு நகைச்சுவையாக தென்பட்டாலும், புகைப்பட சூட்டிங் போன்று தென்பட்டாலும் அதிலுள்ள விடயங்களை உற்று நோக்கி பார்க்க வேண்டும். பச்சையாக தெரிவதெல்லாம் நெற்கதிர்தான் எனும் முடிவுக்கும் வர முடியாது.
ஒரு சிறந்த விவசாயியின் வழிநடத்தலிலேயே இந்த நாள் விதைச்சல் நிகழ்வு நடந்துள்ளது. நாள் விதைச்சலை ஏர்பூட்டி உழுது, பொங்கல் பொங்கி அனைவருக்கும் பகிர்ந்தளித்து வெள்ளாண்மையினை ஆரம்பிப்பது மரபு. அதனை ஒரு தீவிர விவசாயின் ஆலோசனையோடு, வழிநடத்தலோடு செய்திருக்கிறார். எனவே சமூக வலைத்தளங்களில் கூறப்படுவது போல போலியான சம்பவங்கள் நடந்திருக்க வாய்ப்பில்லை.
இன்று அரிசி விலையேற்றம் பற்றி பேசும் பலர் தங்கள் சொந்த நெல் வயல்களில் பயிர்செய்கையில் ஈடுபடாமல் குத்தகை எனவும் பெயரில் பணத்தை வாங்கி கொண்டிருக்கிறார்கள். விவசாயத்தில் தமிழ் மக்கள் அனைவரும் களமிறங்கும் பட்சத்தில் முதலாவது அடிப்படை தேவையான உணவுக்கான தன்னிறைவு பொருளாதரம் பூர்த்தியாகும்.
வட பகுதியில் விளையும் நெல்லுக்கு, பொலநறுவையில் விலை தீர்மானிக்கப்படுகிறது. எங்கள் அரிசி எங்கள் மண்ணிலிருந்து போய், மீண்டும் பிறிதொருவர் நிர்ணயித்த விலையோடு அரிசியாக வருகிறது. எந்தவொரு விவசாயியும், அரிசியினையும், அரிசி மாவினையும் விலை கொடுத்த வாங்க மாட்டான்.
ஓரு வருட உணவுக்கான அரிசி வீட்டில் மூட்டை கட்டியபடி இருக்கும்,. என்ன கஷ்டம் வந்தாலும் சம்பலும், சோறும், பாலும், தயிரும் என யாரிடமும் கையேந்தாமல் வாழ பழகியவன் விவசாயி. இப்போது இந்த நிலை மாறிப்போய்விட்டது.
ஆக சுமந்திரனின் இந்த விவசாய ஆரம்பத்தை, கேலியாக பார்க்காமல், நல்ல முறையில் பார்த்தால் நல்ல ஆரம்பமே. பழக்கமில்லத ஒன்றை செய்தால் எல்லாம் கேலியாகத்தான் இருக்கும். போக போக எல்லாவற்றையும் பழகலாம். சமூக வலைத்தளங்களில் மாத்திரமே விவசாயம் செய்து உண்பவர்களுக்கு இது தெரிந்திருக்க நியாயமும் இல்லை.
விவசாயிகளின் ஒரு அடையாளமாக, தன் பூர்வீகத்தின் ஒரு அடையாளமாக, தமிழர்களின் ஒரு அடையாளமாக அவர் தன்னை வெளிக்காட்டியது பாராட்டத்தக்கதே தவிர கேலிக்குரியதல்ல.
எனவே எல்லாவற்றையும் நேர்மறையாக பார்க்கின்ற தன்மையோடு பார்க்கும் எமது தமிழரின் குணவியல்பு மாறவேண்டும். அனைத்தையும் யதார்த்தமாக பார்க்க ஆரம்பித்தால் முன்னேற்றமும், வெற்றியும் எமக்கு கிடைக்கும்.
ச.விமல்
பணிப்பாளர்- வி தமிழ்
ஊடகவியலாளர்/அறிவிப்பாளர்