LPL – கொழும்பு அணியின் உரிமை மாற்றம்

லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பங்குபற்றும் கொழும்பு அணி புதிய உரிமையாளரின் கீழ் வந்துள்ளது. இதன் காரணமாக கொழும்பு அணி இந்த வருட ப்ரீமியர் லீக் தொடரில் கொழும்பு ஸ்ட்ரைக்கேர்ஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என லங்கா பிரீமியர் லீக் உரிமையை பெற்றுள்ள IPG குழுமம் அறிவித்துள்ளது.

அமெரிக்கா, நியூயோர்க்கை சேர்ந்த SKKY குழு நிறுவனம் கொழும்பு அணியின் உரிமையினை பெற்றுள்ளது. அந்த நிறுவனத்தின் சாகர் கானா என்பவரின் கீழ் அணி இப்போது வந்துள்ளது. கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட இவர், அமெரிக்க நியூயோர்க் Skky ஸ்ட்ரைக்கர்ஸ் எனும் கிரிக்கெட் லீக் தொடரையும் அவர் ஆரம்பித்துள்ளார்.

“தெற்காசியாவின் மிகச் சிறந்த நகரங்களில் ஒன்றான கொழும்பில் எங்கள் பெயரை இணைப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சிறந்த கிரிக்கெட் வரலாற்றையும், பழம்பெரும் கிரிக்கெட் வீரர்களையும், மிகுந்த ஆர்வமுள்ள ரசிகர்களையும் கொண்டது கொழும்பு. இந்த உரிமையை பெற்றதன் மூலம் தெற்காசிய கிரிக்கெட் உலகில் Skky கால் பதிக்கிறது. Skky நிறுவனத்தின் வளர்ச்சியின் மூலோபாயத்தில் இது குறிப்பிடத்தக்க மைற்கல். எல்.பி.எல் குறுகிய காலத்தில் விரைவாக உலகில் அதிகம் பின்பற்றப்படும் அதேவேளை, புகழ்பெற்ற கிரிக்கெட் லீக்குகளில் ஒன்றாக உருவெடுத்து முன்னேறுகிறது. கொழும்பு ஸ்ட்ரைக்கேர்ஸ் மற்றும் எல்பிஎல் ஆகியவற்றை புதிய நிலைக்கு கொண்டு செல்ல இலங்கை கிரிக்கெட் மற்றும் IPG உடன் இணைந்து பணியாற்ற நாங்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறோம்” என Skky நிறுவன உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

அஞ்சலோ மத்தியூஸ் தலைமையிலான கொழும்பு அணிக்கு வருகை தந்துள்ள புதிய உரிமையாளரை எமது எல்.பி.எல் குடும்பத்துக்கு வரவேற்கும் அதேவேளை, அவர் உரிய முறையில் இந்த குழுவில் இறுக்கமாக அமைந்து விடுவார் என எல்.பி.எல் உரிமையினை பெற்றுள்ள IPG குழுமத்தின் தலைவர் அணில் மோகன் தெரிவித்துள்ள அதேவேளை சாகர் கானாவுடன் வேலை செய்வதறகு எதிர்பார்த்துள்ளதாகவும், இலங்கை மற்றும் உலகளாவிய கிரிக்கெட் ரசிகர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கவும் தயாராக இருப்பதாக மேலும் அவர் கூறியுள்ளார்.

“SKKY நிறுவனத்தை நாங்கள் வரவேற்கிறோம். இந்த நிறுவனம் காட்டிய ஆர்வம் LPL இற்கு பலம் சேர்க்கும். வளர்ந்து வரும் முக்கிய கிரிக்கெட் லீக்கான LPL, Skky நிறுவனத்தையும் இணைத்துக்கொண்டு முன்னோக்கி செல்லும்” என லங்கா பிரீமியர் லீக் பணிப்பாளர் சமந்த டொடன்வெல கருத்து வெளியிட்டுள்ளார்.

Social Share

Leave a Reply