எக்ஸ்பிரஸ் பேல் கப்பல் லஞ்ச சர்ச்சை – புதிய தகவல்

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் எரிந்ததன் மூலம் ஏற்பட்ட இழப்புகளை வழங்காமல் இருப்பதற்கு இங்கிலாந்தில் வாழும் சாமர குணசேகரவுக்கு 250 மில்லியன் டொலர்களை இங்கிலாந்து வங்கி கணக்கிற்கு இலஞ்சமாக வைப்பு செய்யப்பட்டதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்திருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும இந்த தகவலை கூறியதாகவே அமைச்சர் இந்த விடயத்தை வெளிப்படுத்தியிருந்தார். இவ்வாறான நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும பாராளுமன்றத்தில் இன்று(11.05) இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.

தான் சாமர குணசேகரவின் மேற்கிந்திய தீவுகள், பார்மாஸிசில் உள்ள வங்கியில் வைப்பிலிடப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அதனை ஆராய்ந்து பார்க்குமாறு கூறியதாகவும், உறுதியாக கூறவில்லை எனவும் தான் கூறிய விடயங்கள் மூலமாக இந்த விடயத்தை முழுமையாக திசை திருப்புவதற்காக அமைச்சர் பாவித்துள்ளார் எனவும் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள் மீதான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஜித் மன்னப்பெரும பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

“அமைச்சரை நம்பியே இந்த விடயத்தை பார்க்குமாறு இரகசியமாக கொடுத்தேன். உறுதி செய்யப்பட்ட தகவலாக இருந்தால் ஏன் இரகசியமாக நான் அவரிடம் வழங்க வேண்டும்? எதனையும் செய்யாமல் ஊடங்களுக்கு கருத்து கூறிவிட்டு தற்போது மயில் நடனமாடுகிறார் அமைச்சர். அவர் கூறியது பிழை என்று தெரிந்ததும், தற்போது என்னை தாக்குகிறார். தகவல் தொடர்பில் ஆராயாமல், தகவலை வழங்கியவரை அவர் தாக்குகிறார்” என அஜித் மன்னப்பெரும கூறியுள்ளார்.

“ஒரு மாத காலம் ஆகியும் அமைச்சரினால் இந்த விடயம் தொடர்பில் கணடறிய முடியவில்லை. இந்த விடயம் சரியா தவறா என ஒரு அறிக்கையை தானும் வெளியிட முடியவில்லை” என தெரிவித்த அவர், அமைச்சர் தனது பதவியை சிறு பிள்ளையிடம் வழங்கலாம் எனவும் கூறியுள்ளார்.

Social Share

Leave a Reply