ஒரு இலட்சம் குரங்குகளை சீனாவில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு அனுப்ப எடுக்கப்பட்ட முடிவை இரத்து செய்து உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பில் விளக்கமளிக்க பிரதிவாதிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தல் விடுத்துள்ளது.
இலங்கை வனவிலங்கு மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட 27 பங்குதாரர்களால் சமர்ப்பிக்கப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஷங்க பந்துல கருணாரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதியின் சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, இந்தச் செயல் மிருகவதைச் சட்டம் மற்றும் வனவிலங்கு மற்றும் தாவரங்கள் கட்டளைச் சட்டம் ஆகியவற்றின் விதிகளுக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வாறான நடவடிக்கைகள் நாட்டின் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், விலங்குகளுக்கு கொடுமைகள் அதிகம் ஏற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.