கைது செய்யப்பட்ட பின்னர் உயிரிழந்த பெண் தொடர்பில் நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

வெலிகடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர் உயிரிழந்த பெண் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம். இன்று (02.06) குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் பண்டார இலங்கசிங்க முன்னிலையில் இன்று (02.06) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்த குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் அதிகாரிகள், உயிரிழந்த பெண் இறுதியாக இருந்த இடத்தின் சீ.சீ.டி.வி காட்சிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்த போதிலும் அவை வழங்கப்படவில்லை என தெரிவித்தனர்.

மேலும், அந்த காட்சிகளை வழங்க உத்தரவிடுமாறு நீதவானிடம் கோரிக்கை முன்வைத்தனர்.

உயிரிழந்த பெண்ணின் உடல் பாதையில் இருந்த நிலையில் மீட்டதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தபோதும் அவ்வாறு சடலம் ஒன்று மீட்கப்படும் பட்சத்தில் கையாள வேண்டிய சட்ட நடைமுறைகள் இருப்பதாக பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மஞ்சுள பத்திராஜ கேள்வி எழுப்பியிருந்தார்.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் நீதிமன்ற படிவங்களை நிரப்புதல், குறிப்பெடுத்தல், வைத்தியசாலை பொலிஸாருக்கு அறிவித்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற போதிலும் இந்த சம்பவத்தில் அவை பின்பற்றப்படவில்லை என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், அது குறித்து ஆராய்ந்து பார்க்குமாறு உத்தரவிட வேண்டும் என சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.

இதனடிப்படையில் உயிரிழந்த பெண் இறுதியாக இருந்த இடத்தின் சீ.சீ.டி.வி காட்சிகள் மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் குறிப்புகளை பெற்று விசாரணை நடத்துமாறு நீதவான் குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.

அந்த விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து எதிர்வரும் 21ம் திகதி அறிக்கை தாக்கல் செய்யுமாறும் நீதவான், குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

பிரபல பெண் வர்த்தகரும் சின்னத்திரை தயாரிப்பாளருமான சுதர்மா ஜயவர்தனவின் வீட்டில் பணிப்பெண்ணாக தொழில் புரிந்து வந்த பதுளை தெமோதர பிரதேசத்தை சேர்ந்த ஆர்.ராஜகுமாரி, வெலிகடை பொலிஸார் கைது செய்திருந்த நிலையில் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தை அடுத்து வெலிகடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட சிலர் இடமாற்றம் செய்யப்பட்டதுடன் இரண்டு பொலிஸார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

அத்துடன் சம்பவம் தொடர்பான விசாரணைகளை குற்றவியல் விசாரணை திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.

Social Share

Leave a Reply