நிதிக்குழுவின் தலைவராக கலாநிதி ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டமை குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாகவும், இது தொடர்பில் பல தடவைகள் பிரேரணைகள் முன்வைக்கப்பட்ட போது பல்வேறு தரப்பினரிடமிருந்து தடைகளும் பல்வேறு சதிகளும் இருந்த போதிலும் இறுதியில் உண்மை வென்றதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (08.06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நிதிக்குழுவின் தலைவரை நியமிக்க நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதி சமூகமளித்து இதை மேற்கொள்ள வேண்டுமா என்பதில் நாடாளுமன்ற நிலையியற் கட்டளை சார்ந்து சிக்கல் எழுவதாகவும், இவ்வாறான நியமனத்தில் ஜனாதிபதி தலையிட நேர்ந்தமை துரதிஷ்டம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள்,சட்டங்களை மீறி பதவிக்கு நியமிப்பதில் தாமதம் மற்றும் சட்ட விரோதமாக தற்காலிக தவிசாளர்களை நியமித்து கட்டளைச்சட்டங்களை கொண்டு வருவதற்கான அனுமதியை பெறுவதற்கு மேற்கொண்ட நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாகவும், இந்த விவகாரத்தில் தலையிட வேண்டிய கடமை சபாநாயகருக்கு இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
கலாநிதி ஹர்ஷ டி சில்வாவின் நியமனத்தை தடுத்து நிறுத்துவதற்கு பல்வேறு அரசியல் சதிகள் இடம்பெற்றாலும்,இந்நேரத்தில் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல தரப்புகளும் ஒன்றிணைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும்,இந்நியமனத்தை வழங்குவதற்கு ஜனாதிபதியின் தலையீட்டை பாராட்டுகின்ற அதேவேளை, பல்வேறு அரசியல் சதிகளை மேற்கொண்டு ஆளும் தரப்பினர் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை மீறுவதை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.