”உர மோசடி தொடர்பில் விசாரணைகள் எங்கே” – எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

சேதன உர மோசடி,நானோ திரவ உர மோசடி போன்றவற்றால் நாட்டுக்கு ஏற்பட்ட நஷ்டத் தொகை தொடர்பாகவும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (09.06) பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

சீன சேதன உரங்களுக்காக 6.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டுள்ள போதிலும்,தற்போது உரமோ அல்லது குறித்த பணமோ இல்லை எனவும்,பணத்தை மீட்பதற்கும் நஷ்டத்தை ஈடுகட்டுவதற்கும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக கணக்காய்வாளர் நாயகம் கூட பரிந்துரை செய்துள்ள நிலையில்,இந்த பெரும் இழப்பை ஈடுகட்ட எப்போது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தாம் வினவுவதாகவும், மோசடியான,  இலஞ்ச ஊழல் நடவடிக்கையில் நாட்டுக்கு ஏற்பட்ட நஷ்டத் தொகை எப்போது மீளப்பெறப்படும் என தாம் வினவுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள இந்திய உர நிறுவனம் மூலம் 21 இலட்சம் லீட்டர் நானோ நைட்ரஜன் திரவ உரம் மிகவும் தவறான நடைமுறை மூலம் பெறப்பட்டுள்ளதாகவும்,
இந்தியாவில் 3.23 அமெரிக்க டொலர்களுக்கு விற்கப்பட்ட 500 மி.லீட்டர் நானோ திரவ உர போத்தலொன்று இலங்கையில் 12.45 அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்யப்பட்டதாகவும், 7841 மில்லியன் ரூபா மேலதிகமாக செலுத்தப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பான அறிக்கைகள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களுக்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தாம் கேட்பதாகவும்,இதுதொடர்பான கணக்காய்வு அறிக்கை கோப் குழுவிடம் கூட சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் அந்தந்த நாடுகளுக்கு எதிராக அன்றி,குறித்த பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்ட ஊழல் மிக்க மக்கள் பிரதிநிதிகள் மீது சுமத்தப்படுவதாகவும், மக்களின் பணமே இவ்வாறு இழக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply