75 மில்லியன் சொத்து விவகாரம் : விமல் வீரவன்சவிற்கு அழைப்பாணை!

சுமாா் 75 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் மற்றும் பணத்தை ஈட்டியமை தொடா்பான தகவலை வெளியிடத் தவறியமைக்காக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது.

2010ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை அமைச்சராக கடமையாற்றிய காலப்பகுதியில் விமல் வீரவங்ச சுமாா் 75 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்து மற்றும் பணம் ஈட்டியமை தொடர்பிலான தகவலை வௌியிடத் தவறியமை தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கு நேற்று (16.06) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஆயிஷா ஜினசேன 2017ஆம் ஆண்டு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள போதிலும் அது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என சுட்டிக்காட்டினாா்.

இந்நிலையில் நேற்றைய அமர்வின்போது பிரதிவாதியான விமல் வீரவன்ச நீதிமன்றில் ஆஜராகவில்லை என்பதுடன், அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தனது கட்சிக்காரருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன்படி இந்த வழக்கை எதிர்வரும் ஜூலை 17ஆம் திகதி மீண்டும் அழைப்பதற்கு உத்தரவிட்ட மேல் நீதிமன்ற நீதிபதி அன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகுமாறு விமல் வீரவன்சவுக்கு அழைப்பாணை விடுத்துள்ளார்.

Social Share

Leave a Reply