சமூகவலைத்தளங்களின் மூலம் இடம்பெறும் பணமோசடிகள் தொடர்பில் எச்சரிக்கை!

சமூக வலைத்தளங்களினூடாக இடம்பெறுகின்ற மோசடி சம்பவங்கள் தொடர்பில், கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு 108 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இது தொடர்பில் 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கணனி குற்றத்தடுப்பு பிரிவினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், மக்கள் தங்களின் தனிப்பட்ட தகவல்கள மற்றுமொரு தரப்பினருக்கு வழங்க வேண்டாம் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பொலிஸ் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (16.06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி. ஜெயநெத்சிறி இந்த விடயத்தை வலியுறுத்தினார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் விளம்பரங்கள் மூலம் மக்களை ஏமாற்றி பண மோசடி செய்யும் சம்பவங்கள் நாட்டில் தற்போது அதிகரித்துள்ளது.

இவ்வருடத்தின் முதல் காலாண்டில் மாத்திரம் 108 சம்பவங்கள் இடம்பெற்றதுடன், 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த இரண்டரை வருடங்களில் இணைய குற்றங்கள் தொடர்பில் 9000 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.

சமூக வலைத்தளங்களினூடாக பண மோசடி சம்பவங்கள் அதிகம் பதிவாகும் நிலையில் தமது தனிப்பட்ட தகவல்களை மற்றுமொரு தரப்பினருக்கு வழங்க வேண்டாம். அவ்வாறு வழங்கும்போது மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.


Social Share

Leave a Reply