இலங்கை, ஐக்கிய அரபு இராட்சிய அணிகளுக்கிடையில் நடைபெற்ற உலகக்கிண்ண தெரிவுகாண் போட்டியில் இலங்கை அணி 175 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. வனிந்து ஹசரங்கவின் அபாரமான பந்துவீச்சின் மூலமாகவும், முன் வரிசை துடுப்பாட்ட வீரர்களின் சிறந்த துடுப்பாட்டம் இந்த வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
மற்றுமொரு போட்டியில் அயர்லாந்து அணிக்கு அதிர்ச்சி வழங்கி ஓமான் அணி 05 விக்கெட்களினால் வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை, ஐக்கிய அரபு இராட்சிய போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 06 விக்கெட்களை இழந்து 355 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் குஷல் மென்டிஸ் 78 ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம 73 ஓட்டங்களையும், பத்தும் நிஸ்ஸங்க 57 ஓட்டங்களையும், திமுத் கருணாரட்ன 52 ஓட்டங்களையும் பெற்றனர். சரித் அசலங்க ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்களையும் பெற்றனர். அலி நசீர் பந்துவீச்சில் 02 விக்கெட்களை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பாடிய ஐக்கிய அரபு இராட்சிய அணி 39 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 180 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் ரித்தியா அரவிந்த், மொஹமட் வசீம் ஆகியோர் தலா 39 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர். பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 06 விக்கெட்களை கைப்பற்றினார். இதுவே அவரின் முதலாவது ஐந்து விக்கெட் பெறுதியாகும்.
ஓமான், அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் முதலில் துடுப்பாடிய அயர்லாந்து அணி 50 ஓவர்களில் 07 விக்கெட்களை இழந்து 281 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் ஜோர்ஜ் டொக்ரல் ஆட்டமிழக்காமல் 91 ஓட்டங்களையும், ஹரி ரெக்டர் 52 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்துவீச்சில் பிலால் கான், பயாஸ் பட் ஆகியோர் தலா 02 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய ஓமான் அணி 48.1 ஓவர்களில் 05 விக்கெட்களை இழந்து 285 ஓட்டங்களை பெற்றது. இதில் காஷ்யப் ப்ரஜபட்டி 72 ஓட்டங்களையும், ஷீஷான் மக்ஸூட் 59 ஓட்டங்களையும், அக்கிப் இலியாஸ் 52 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஜோஸ் லிட்டில், மார்க் அடர் ஆகியோர் தலா 02 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.