வன்முறைக் குற்றச் செயல்கள் தொடர்பில் அதிரடி நடவடிக்கை!

தென் மற்றும் மேல் மாகாணங்களில் இடம்பெறும் வன்முறைக் குற்றச் செயல்கள் தொடர்பில் உடனடி கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபரால் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஜூலை 31ம் திகதி வரை அங்கீகரிக்கப்படாத அல்லது உரிமம் இல்லாத துப்பாக்கிகளை ஒப்படைப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கைக்குள் போதைப்பொருள் கொண்டு வரும்போதும் மற்றும் மேலும் பல சந்தர்ப்பங்களில் அதிகளவிலான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாவதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த 6 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் சட்டவிரோதமான முறையில் வைத்திருந்த 05 கைத்துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டதுடன் அவை கொலைகளுக்கு பயன்படுத்தப்பட்ட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 43 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், அதில் 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

Social Share

Leave a Reply