ஆழ்கடலில் மாயமாகியிருந்த டைட்டானிக் நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறியுள்ளதாக அமெரிக்க கடலோர காவல் படையினர் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த கப்பலில் பயணம் செய்த ஐந்து கோடீஸ்வரர்களும் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களின் உடல்களை மீட்பதும் கேள்விக்குறியாகவே உள்ளதாகவும் கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு கடந்த 1912 ஆம் ஆண்டு புறப்பட்ட டைட்டானிக் கப்பல் செல்லும் வழியில் பனிப்பாறை மீது மோதி விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில், கப்பலின் சிதைந்த பாகங்கள், அமெரிக்காவின் நியூ ஃபௌண்ட்லாண்ட் தீவுக்கு 740 கி.மீட்டர் தொலைவில் கடலுக்கு அடியில் கண்டுப்பிடிக்கப்பட்டது.
இந்நிலையில், கப்பலின் சிதைந்த பாகங்களை பார்க்க நீருக்கடியில் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் நடவடிக்கையில், பிரபல நிறுவனமான ‛தி ஓசன் கேட்’ என்ற நிறுவனம் ஈடுபட்டிருந்தது.
இந்த டைட்டன் நீர்மூழ்கி கப்பல் ஐந்து தொழிலதிபர்களை அழைத்துக் கொண்டு தனது பயணத்தை ஆரம்பித்தது. பயணத்தை ஆரம்பித்த இரண்டு மணி நேரத்திலேயே, தொடர்பை இழந்தது மாயமானதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
இதனையடுத்து, குறித்த நீர்மூழ்கி கப்பலை கண்டுபிடிப்பதற்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த கப்பல்கள், விமானங்கள் மற்றும் நீர்மூழ்கி வாகனங்கள் போன்றவை களமிறக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இந்தநிலையிலேயே, டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.