மட்டக்களப்பு பாடுமீன் பொழுது போக்கு கழகத்தின் 75 வது ஆண்டினை சிறப்பிக்கும் வகையில் பாடுமீன் பொழுது போக்கு கழகத்தின் ஏற்பாட்டில் பத்மநாபா ஞாபகார்த்த சவால் கிண்ண உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி நிகழ்வு வெபர் மைதானத்தில் இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் பத்மநாபா ஞாபகார்த்த அமைப்பின் அனுசரணையுடன் மட்டக்களப்பு பாடுமீன் பொழுது போக்கு கழகம் 32 கால்பந்தாட்ட அணிகளுடன் நொக்கவுட் முறையில் நடாத்தப்பட்ட கால்பந்தாட்ட சுற்று போட்டி கடந்த மே மாதம் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக சுற்றுப்போட்டி இடம்பெற்றுவந்த நிலையில் இறுதி போட்டி நேற்று மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது.

இறுதி போட்டியில் ஏறாவூர் எஸ்.எஸ்.சி கழக அணியினரும் கஞ்சிரங்குடா ஜெகன் அணியினரும் மோதிக்கொண்டனர். இதன்போது ஏறாவூர் எஸ்.எஸ்.சி கழக அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று பாடுமீன் பொழுது போக்கு கழகத்தின் 75 ஆண்டு சவால் கிண்ணத்தை எஸ்.எஸ்.சி விளையாட்டு கழகம் சுகிகரித்துக்கொண்டது.

மட்டக்களப்பு பாடுமீன் பொழுது போக்கு கழகத்தின் தலைவர் பா.செல்வராஜா தலைமையில் நடைபெற்ற இறுதி போட்டி நிகழ்விற்கு பிரதம அதிதியாக டான் தொலைக்காட்சி குழும தலைவர் எஸ்.எஸ்.குகநாதன் கலந்து சிறப்பித்தார்.

இறுதி போட்டி நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வீ.ஈஸ்வரன், பாடுமீன் பொழுதுபோக்கு கழகத்தின் உபதலைவர்களான அசோக்குமார், பரமராசா, செயலாளர் பத்மராஜா கோபிராஜ், பொருளாளர் த.ரஜினிகாந்த், சுற்றுப்போட்டி குழு தலைவர் ரோகினி புவனசிங்கம் மட்டக்களப்பு போக்குவரத்து சபை முகாமையாளர் க.ஶ்ரீதரன், பத்மநாபா ஞாபகார்த்த சவால் கிண்ண அனுசரணையாளர்கள் பத்மநாபா மக்கள் முன்னணியின் உறுப்பினர் தோழர் சுகு உள்ளிட்ட பாடுமீன் பொழுதுபோக்கு கழகத்தின் பிரதிநிதிகள், கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டதுடன் வெற்றிபெற்ற அணிகளுக்கு வெற்றிக் கிண்ணங்களையும், பணப்பரிசில்களையும் வழங்கி வைத்ததுடன் வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கான பதக்கங்களையும் அணிவித்து கௌரவித்திருந்தனர்.