இலங்கை – தாய்லாந்து வர்த்தக பேச்சுவார்த்தை வெற்றி!

ஆசியான் நாடுகளுக்கு விசேட கவனம் செலுத்தி பிரதான மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களுடன் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொலைநோக்குப் பார்வைக்கு அமைவாக, இலங்கை தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (SLTFTA) தொடர்பான ஐந்தாவது சுற்றுப் பேச்சுவார்த்தை இன்று (26.06) காலை கொழும்பில் ஆரம்பமானது.

கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் தொடங்கிய அதன் ஆரம்ப அமர்வில் கருத்துத் தெரிவித்த சர்வதேச வர்த்தக அலுவலகத்தின் இலங்கைப் பிரதிநிதிகள் குழுவின் பிரதான பேச்சுவார்த்தையாளர் கே.ஜே. வீரசிங்க, உடன்பாடு காணப்பட்ட காலவரையறையின்படி நடைமுறைப்படுத்தப்படுகின்ற இலங்கை தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து திருப்தி அடைய முடியும் என்று குறிப்பிட்டார்.

அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை தாய்லாந்தில் ஆகஸ்ட் 21 முதல் 23, வரை நடைபெறும் என்றும், 2024 மார்ச்சில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 2024ஆம் ஆண்டு பெப்ரவரியில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள இறுதிப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக மேலும் மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (SLTFTA) தொடர்பான ஐந்தாவது சுற்றுப் பேச்சுவார்த்தை எதிர்வரும் 28ஆம் திகதி புதன்கிழமை வரை நடைபெறவுள்ளது.

உலகளாவிய பொருளாதாரத்துடன் இணைவதற்கான இலங்கை அரசாங்கத்தின் நோக்கத்தை தாய்லாந்து பிரதிநிதிகளுக்கு விளக்கிய வீரசிங்க, பிராந்திய விரிவான பொருளாதார பங்காளித்துவத்தில் (RCEP) அங்கம் வகிப்பதற்காக, இலங்கையின் பொருளாதார பிரவேசத்தை முதலில் தெற்காசியாவிலும் பின்னர் அதை கிழக்கு நோக்கியும் விரிவுபடுத்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எதிர்பார்ப்பை தாய்லாந்து தூதுக்குழுவிடம் விளக்கினார்.

பிராந்திய விரிவான பொருளாதார பங்காளித்துவத்திற்கான (RCEP) செயலகமாகவும் செயல்படும் ஆசியான் செயலகத்தின் செயலாளர் நாயகம் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இலங்கை ஏற்கனவே இது குறித்து ஆராய்ந்துள்ளது. ஆசியான் மற்றும் பிராந்திய விரிவான பொருளாதாரம் பங்காளித்துவம் ஆகிய இரு துறைகளிலும் தாய்லாந்தின் தீவிர பங்களிப்பைக் கருத்தில் கொண்டு, பிராந்திய விரிவான பொருளாதார பங்காளித்துவத்தில் (RCEP)இணைவதற்கு இலங்கை தாய்லாந்தின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் வீரசிங்க கூறினார்.

தாய்லாந்தின் வர்த்தக பேச்சுவார்த்தைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அவுரமன் சுப்தாவிதும் (Auramon Supathaweethum)ஒன்லைன் தொழில்நுட்பத்தின் ஊடாக பங்குபற்றியதோடு, இலங்கைக்கான தாய்லாந்து தூதூவர் போஜ் ஹர்ன்பொல்(Poj Harnpol) உள்ளிட்ட தாய்லாந்து பிரதிநிதிகளும், சர்வதேச ஊடகத்துறை தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஷேனுகா செனவிரத்ன , ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் சாந்தனி விஜயவர்தன, பிரதி பிரதான பேச்சுவார்த்தையாளர் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எஸ்.டபிள்யூ.சி. ஜயமினி உள்ளிட்ட இலங்கை பிரதிநிதிகள் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

இலங்கை - தாய்லாந்து வர்த்தக பேச்சுவார்த்தை வெற்றி!
இலங்கை - தாய்லாந்து வர்த்தக பேச்சுவார்த்தை வெற்றி!
இலங்கை - தாய்லாந்து வர்த்தக பேச்சுவார்த்தை வெற்றி!
இலங்கை - தாய்லாந்து வர்த்தக பேச்சுவார்த்தை வெற்றி!

Social Share

Leave a Reply