கிளிநொச்சி மாவட்டதின் கரைச்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பொன்நகர் பகுதியின் காணிப் பயன்பாட்டு விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை நேற்று (26.06) முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கிளிநொச்சி பொன்நகர் பகுதியில் வியாபார நடவடிக்கைகளுக்காக வழங்கப்படுகின்ற காணிகள் தொடர்பில் ஆட்சேபனையினை தெரிவித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை இவ்வாறு முன்னெடுத்திருந்தனர். குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டமானது கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகம் வரை சென்று பின் மாவட்ட செயலகம் வரை சென்று மகஜர் கையளிப்புடன் நிறைவுபெற்றிருந்தது.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் அவர்களின் நடவடிக்கைகளுக்காக மகஜர் ஒன்றினை மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஸ்ரீமோகனன் அவர்களிடம் கையளித்திருந்தனர்.
மேலும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை நேரில் சந்தித்த கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துக்களை தெரிவித்திருந்தார். அந்தவகையில் வியாபார நடவடிக்கைகளுக்காக வழங்கப்படுகின்ற காணிகள் தொடர்பான ஆட்சேபனைகளை பொன்நகர் கிராம மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்திருந்தார்கள்.
காணிகள் பொருத்தமான இடங்களில் வழங்கப்படவில்லையென்றும் மாவட்டத்தின் புற பகுதிகளிலிருந்து வியாபார நடவடிக்கைக்காக வருகின்ற முதலாளிகளுக்கு வழங்குவதாக முறையிட்டிருக்கின்றார்கள். அவர்களின் ஆட்சேபனைகள் குறித்து உரிய பிரதேச செயலாளருடன் கலந்துரையாடுவதோடு இவ்விடயம் தொடர்பான விசாரணையினை மேற்கொண்டு பொருத்தமின்மை உள்ளதா என்பதனை ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ளபடவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.