கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு திணைக்கள அதிகாரிகள், கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்கள் மற்றும் பொது முகாமையாளர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடலொன்று இன்று (30.06) காலை 10.00 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் அவர்களின் தலைமையில் மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த காலங்களில் அரச நிதியிலிருந்து பல திட்டங்களிற்காக பல இயந்திர சாதனங்கள் உற்பத்தி கூட்டுறவு கருத்திட்டத்திற்கமைய கூட்டுறவு சங்கங்களிற்கு வழங்கப்பட்டிருந்தன. ஆனால் அவற்றினை பெற்றுக்கொண்ட சில நிறுவனங்களின் செயற்பாடுகள் திருப்தியானதாக இல்லை என்ற குற்றச்சாட்டுக்கள் பரவலாக முன்வைக்கப்பட்டன. இதனைவிட கணக்காய்வு ஐய வினாக்களிலும் இவ் விடயம் சார்ந்த பிரச்சினைகள் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இவற்றின் பயன்பாடுகள் தொடர்பாக ஆராயும் நோக்கில் மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கலந்துரையாடலின் போது குறித்த கூட்டுறவு சங்கங்களின் திரட்டப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு துறைசார்ந்தவர்களுடன் விரிவாக ஆராயப்பட்டது. குறித்த இயந்திர சாதனங்களை பயன்படக்கூடியவாறு மாற்றுவதற்கான நடைமுறைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.அத்தோடு அவ் நடைமுறைகளை பின்பற்றி வெளியீட்டினை பெற்றுக்கொடுப்பதற்கான கால அவகாசமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்கஅதிபர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம கணக்காளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், கூட்டுறவுத் திணைக்கள உதவி ஆணையாளர், துறைசார்ந்த அதிகாரிகள், கூட்டுறவு சங்கங்களின் பொது முகாமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.