ஸ்கொட்லாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் இன்று (01.07) ஹராரேயில் நடைபெற்ற உலகக்கிண்ண தெரிவுகாண் போட்டியில் ஸ்கொட்லாந்து அணி 7 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. ஸ்கொட்லாந்து அணியின் அபார துடுப்பாட்டத்தினாலும், பந்துவீச்சினாலும் இந்த வெற்றியினை பெற்றுக்கொண்டது. இந்த தோல்வியின் மூலம் மேற்கிந்திய தீவுகள் உலகக்கிண்ண முதற் தடவையாக உலகக்கிண்ண வாய்ப்பை இழந்ததுள்ளது. டெஸ்ட் அந்தஸ்து பெற்றுள்ள முழு அங்கத்துவ நாடு உலகக்கிண்ண வாய்ப்பை இழந்துள்ளது. இதற்கு முன்னர் சிம்பாவே அணி இவ்வாறு வாய்ப்பபை இழந்திருந்தது.
உலகக்கிண்ண தொடரின் முதல் இரு கிண்ணங்களையும் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி இவ்வாறு உலகக்கிண்ண வாய்ப்பை இழந்துள்ளமை கிரிக்கெட் வட்டாரத்தில் மிகவும் அதிர்ச்சியான விடயமாகவே உள்ளது. ஜாம்பவான்கள் நிறைந்த கிரிக்கெட் நாடு இவ்வாறு மோசமான நிலைக்கு சென்றுள்ளது. அத்தோடு இந்த உலகக்கிண்ண தெரிவுகாண் தொடரில் சிறிய அணிகளிடம் தோல்வியடைந்துள்ளது.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஸ்கொட்லாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 43.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 181 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் ஜேசன் ஹோல்டர் 45 ஓட்டங்களையும், ரொமாரியோ ஷெபேர்ட் 36 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ப்ரண்டன் மக்மலன் 03 விக்கெட்களையும், மார்க் வட், க்றிஸ் சோல், க்றிஸ் க்ரேவ்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி 43.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 185 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் மத்திய க்ரொஸ் ஆட்டமிழக்காமல் 74 ஓட்டங்களையும், ப்ரண்டன் மக்மலன் 69 ஓட்டங்களையும் பெற்றனர். இருவரும் 125 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர்.
மேற்கிந்திய தீவுகள் அணி மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெற்றாலும் 4 புள்ளிகளை மட்டுமே பெற முடியுமென்ற நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கான வாய்ப்புகள் இல்லாமல் போயுள்ளன. சுப்பர் 6 அணிகள் ஆறில் இரு அணிகள் வாய்ப்பை இழந்துள்ள நிலையில், இலங்கை, சிம்பாவே ஆகிய அணிகள் தலா 06 புள்ளிகளை கொண்டுள்ளமையினால் அதிக வாய்ப்புகளை கொண்டுள்ளன.
ஸ்கொட்லாந்து அணி 04 புள்ளிகளையும், நெதர்லாந்து அணி 02 புள்ளிகளையும் பெற்றுள்ளன.