மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் முறையான ஆய்வுகளுடனே முன்னெடுக்கப்படுகின்றன – டக்ளஸ்!

கடற்றொழில் அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் முறையான ஆய்வுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றனவே தவிர, தான்தோன்றித்தனமாக எவையும் மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற தேசிய கடன் மறுசீரமைப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘வடக்கு மாகாணத்திலே எமது மக்களின் வாழ்வாதாரங்கள் கருதி, கடலட்டைப் பண்ணைக் கைத்தொழிலை; பரவலாக்கி, இதுவரையில் பல நூற்றுக் கணக்கான தொழில் முயற்சியாளர்களை உருவாக்கியிருக்கின்றோம்.

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’; என்ற அடிப்படையில் கடற்றொழில் மற்றும் நீர் வேளாண்மை சார்ந்து நாம் பல்வேறு புதிய திட்டங்களை செயற்படுத்தி வருகின்றோம்.

‘கறுப்புத் தங்கம்’ எனப்படுகின்ற கடலட்டைப் பண்ணைக் கைத்தொழிலானது எமது மக்களின் பொருளாதாரத்தில் அதீத செல்வாக்கு செலுத்த ஆரம்பித்ததும், சில தமிழ் அரசியல்வாதிகள் முதற்கொண்டு, சில சுரண்டல்வாதிகள் அதற்கெதிரான கருத்தாடல்களை முன்வைத்து வருகின்றனர்.

நாங்கள் தமிழ் தேசத்தின் விடியலுக்காக நீதியான வழியில் இரத்தம் சிந்தியவர்கள். தமிழ் தேசியத்தை வெறும் தேர்தல் கோசமாக ஒரு போதும் உச்சரித்தவர்கள் அல்ல. நாங்கள் அரசியல் யதார்த்த சூழலை உணர்ந்து தேசிய நல்லிணக்க பாதையில் வெளிப்படையாகவே அணிவகுப்பவர்கள், எக்காலத்திலும் அரசுடன் பின் கதவு தட்டி பேசியவர்கள் அல்ல.

விளக்கங்களை கோரும் மக்களுக்கு குழப்பங்களை உருவாக்குவதை நிறுத்துங்கள். சில தொண்டு நிறுவனப் பிரதிநிதிகளும், விளக்கமில்லாததும் – விளக்கமிருந்தும் விளங்காதது போன்ற கருத்துக்களையும், வெளியிட்டு வருகின்றனர்.

இவர்கள், தங்களது வாழ்வாதாரங்களை மாத்திரம் கருத்தில் கொள்ளாமல், மக்களது வாழ்வாதாரங்கள் தொடர்பிலும் அக்கறை செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.

நாங்கள் முறையான ஆய்வுகளுக்கூடாகவே திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். அன்றி, தான்தோன்றித் தனமாக எதையும் முன்னெடுப்பதில்லை. வெளிப்படையான தன்மை கொண்டவையாகவே இத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

கடலட்டை, இறால், நண்டு, கடல் பாசி, சிப்பி போன்ற நீர் வேளாண்மைக் கைத்தொழில்களை ஒருவர் மேற்கொள்ள வேண்டுமெனில் முதலில் அவர், அத் தொழிலினை மேற்கொள்கின்ற பிரதேசத்திற்குரிய பிரதேச செயலாளரிடம் அது சார்ந்த கோரிக்கைக் கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

அதன் பின்னர் தேசிய நீரியல் வளங்கள் அபிவிருத்தி அதிகார சபை(நெக்டா), கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம், கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம் அடங்கலாக கள ஆய்வு நடத்தப்பட்டு, கடற்றொழில் அமைச்சு அதன் சாதக, பாதகங்ளை ஆய்வு செய்து, பின்னரே வேளாண்மைக்கான அனுமதி வழங்கப்படுகின்றது.

இதனை விளங்கிக் கொள்ளாமல் சுயலாப அரசியலுக்காக சிலர் கூக்குரல் இடுவது தொடர்பில் எமது மக்களும் தமிழ் ஊடகங்களும் விழிப்புடனும் பொறுப்புடனும் இருக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply