ஸ்வீடன் நேட்டோவில் இணைய துருக்கி ஒப்புதல்!

ஸ்வீடன் நேட்டோவில் இணைய துருக்கி ஒப்புதல் அளித்துள்ளது.

லித்துவேனியாவின் தலைநகரான வில்னிசில் நேட்டோ உச்சிமாநாடு இன்று (07.11) ஆரம்பமாகவுள்ளது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்ட உலக தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இதன்போது உக்ரைன் நேட்டோவில் இணைவது குறித்து முக்கிய பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையே ஸ்வீடன் நேட்டோவில் இணைவதற்கு துருக்கி சம்மதம் தெரிவித்துள்ளது. இதை ஒரு வரலாற்று நாள் எனக் கூறி ஸ்வீடன் அதிபர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகிய இருநாடுகளும் பாதுகாப்பு கருதி நேட்டோவில் இணைய விண்ணப்பித்திருந்தன. நேட்டோவில் ஒரு நாடு அங்கத்துவமாக வேண்டும் என்றால், மற்ற நாடுகளின் ஒப்புதல் தேவை.

இருப்பினும் குர்தீஷ் பயங்கரவாதிகளை ஸ்வீடன் ஆதரிப்பதாக தெரிவித்து துருக்கி ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்தி வந்தது. இந்நிலையில், தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.

Social Share

Leave a Reply