நீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் ஆலோசனை!

இலங்கையின் நீர் வழங்கல் நடவடிக்கையின் நிலைபேறான தன்மையை உறுதிப்படுத்தல் மற்றும் நாட்டு மக்கள் அனைவருக்கும் சுத்தமான குடிநீரை வழங்குவதை நோக்காகக் கொண்டு நீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில், ஆலோசனைக் குழு கூட்டம் நேற்று (19.07) நடைபெற்றது.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் முகங்கொடுக்க நேர்ந்துள்ள முக்கியமான சவால்களுக்குரிய தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்காகவும், தரமான நீர் விநியோகத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டே நீர்க்கட்டண அதிகரிப்புக்கு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நீர் உற்பத்திக்கான செலவில் குறிப்பிடத்தக்களவு பங்களிப்புச் செய்யும் மின்சாரக் கட்டணம் அதிகரித்துள்ளமை உட்பட பல்வேறு விடயங்கள் இந்நீர் கட்டண அதிகரிப்புக்குக் காரணமாக அமைந்தது என்றும், இதனால் நீர் உற்பத்திக்கான செலவு அதிகரித்து மாதாந்தம் 500 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுவதாகவும் இதன்போது அவர் தெரிவித்தார்.

இதற்கு மேலதிகமாக கடன் சுமை, நாணயத் தேய்மானம், வட்டிவீதம் அதிகரித்துள்ளமை நீரை சுத்திகரிப்பதற்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை அதிகரித்தமை போன்றவையால் மாதாந்தம் சுமார் 2.8 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நீர் விநியோகம் தொடர்பில் காணப்படும் பிரச்சினைகள் குறித்தும் இதில் கலந்துரையாடப்பட்டது. இவை குறித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜீவன் தொண்டமான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்போது, என்னுடன், இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரச மற்றும் எதிர்கட்சி தரப்பு உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர், நீர் வடிகாலமைப்பு சபை தலைவர், அமைச்சின் உயர் அதிகாரிகள், என பலரும் கலந்துக் கொண்டனர்.

Social Share

Leave a Reply