15 வயதுக்குட்பட்ட கிரிக்கெட்டில் கலக்கும் பம்பலப்பிட்டி இந்து

பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி, பாடசாலை கிரிக்கெட் சம்மேளனத்தினால் நடாத்தப்படும் 15 வயதுக்குட்பட்ட பிரிவு 03 இற்கான முதல் சுற்றுப் போட்டிகளில் மிகவும் சிறப்பாக விளையாடி 37.5 புள்ளிகளோடு இரண்டாமிடத்தை பெற்றுள்ளனர். இதன் காரணமாக இரண்டாம் சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்துக் கல்லூரி கிரிக்கெட் அண்மைக்காலமாக சிறப்பான வளர்ச்சிப்பாதையில் செல்கிறது. கடந்த வருடம் முதல் பாடசாலை நிர்வாகம் மற்றும் பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் இந்துக் கல்லூரி கிரிக்கெட் அக்கடமி உருவாக்கப்பட்டு தரம் 01 முதல் கிரிக்கெட் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

வீரர்களின் திறமைகளின் அடிப்படையில் பல்வேறு குழுக்கள் உருவாக்கப்பட்டு இந்தப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பயிற்றுவிப்பாளர் கார்த்திக் இந்தப் பயிற்சிகளை வழங்கி வருகின்றார். இந்த திட்டம் மற்றும் பயிற்சிகளின் மூமாகவே வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர். பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயிற்சிகளை பெற்று வருகின்றனர். இந்தப் பயிற்சிகள் அவர்களது திறமைகளை வெளிக்காட்ட கைகொடுக்கின்றன.

15 வயதுக்குட்பட்ட தொடரில் டி.எஸ் சேனாநாயக்க கல்லூரி அணி முதலிடத்தையும், இந்துக்கல்லூரி இரண்டாமிடத்தையும், ரோயல் கல்லூரி அணி மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளன.

இந்தப் போட்டிகளில் இந்துக் கல்லூரி அணியின் ஆரம்ப வீரர்கள் சிறப்பாக செயற்படுவதோடு இந்த தொடரின் சத இணைப்பாட்டத்தையும் பெற்றுள்ளனர். இந்துக் கல்லூரி அணியின் சந்தோஷ் இந்த தொடரின் முதல் சுற்றின் கூடுதலான ஓட்டங்களை பெற்றுள்ளார். 5 போட்டிகளில் 4 இன்னிங்சில் துடுப்பாடிய சந்தோஷ் கூடுதலான 90 ஓட்டங்களை இசிப்பத்தன அணிக்கெதிராக பெற்றுள்ளதோடு, சகல போட்டிகளிலும் அரைச்சதங்களை பெற்றுள்ளார். மொத்தமாக 324 ஓட்டங்களை 68.4 எனும் சராசரியில் பெற்றுள்ள அதேவேளை பந்துவீச்சில் 7 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார்.

பாடசாலை அதிபர், பொறுப்பாசிரியர்கள், பழைய மாணவர் சங்கத்தினர், பழைய மாணவர்கள், பெற்றோர் என சகலரும் இந்த அணியின் அடுத்த சுற்றை எதிர்பார்த்து காத்திருப்பதோடு, அணியினர் சிறப்பாக விளையாட வீரர்களை உற்சாகப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஹர்னிக்கேஷ், சந்தோஷ், யசூர்யன், அகிலேஷ், சதுர்சன், சர்விஷ், மதுசன், ஆகாஷ், நதீபன், டிலுக்ராகுல், விகாஷ், மோகிஷன், துஷ்யந்தன், ஷிரோன், கேதீஸ், ஸ்ரீதருண் ஆகியோர் முதல் சுற்றுப்போட்டிகளில் விளையாடிய வீரர்கள். இரண்டாம் சுற்றுப் போட்டிகளுக்காக மேலும் 7 வீரர்கள் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

15 வயதுக்குட்பட்ட கிரிக்கெட்டில் கலக்கும் பம்பலப்பிட்டி இந்து

Social Share

Leave a Reply