அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மாத்திரம் கலந்துரையாடுவது போதுமானதல்ல எனவும் அது முழு நாட்டிலும் தாக்கம் செலுத்தும் விடயம் என்பதால் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (26.07) பிற்பகல் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் கூறினார் என ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் மற்றும் வடக்கு-கிழக்கு அபிவிருத்தித் திட்டம் குறித்து பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக இந்த சர்வகட்சி மாநாடு கூட்டப்பட்டது.
பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்கு, புதிய சட்டங்களை நிறைவேற்றும் அதிகாரம், தனக்கு மாத்திரமன்றி இதற்கு முன்னர் பதவியில் இருந்த நிறைவேற்று அதிகாரமுடைய ஏழு ஜனாதிபதிகளுக்கும் இருக்கவில்லை என்றும் புதிய சட்டங்களை நிறைவேற்றும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கே இருப்பதாகவும் தெரிவித்தார்.
நாட்டிற்காக இந்த யோசனைகளை முன்வைப்பது மாத்திரமே தனது கடமை என்றும், இதனை பாராளுமன்றமே நிறைவேற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அத்துடன், பாராளுமன்றத்தில் ஒரேயொரு வாக்கு மட்டும் வைத்துக்கொண்டு இதனை செய்ய முடியாது என்றும் இந்தப் பணிகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைவரும் கூட்டாக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
”இதற்கு முன்னர் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டி இரண்டு முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடினேன். முக்கியமாக 13 ஆவது திருத்தத்தில் நாம் அமுல்படுத்தும் விடயங்கள் தொடர்பில் அங்கு கலந்துரையாடப்பட்டது.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் 1987 இல் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இன்றும் அது தொடர்பான பல பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. இது தொடர்பாக வடக்கு, கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நான் கலந்துரையாடிய போது 13 ஆவது திருத்தத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்ற கேள்விகளை அவர்கள் எழுப்பினர். எனவே முதலில் வடக்கைப் பாதிக்கும் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு அது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகளை குறிப்பிட்டால், ஊழல் தடுப்பு சட்டம் தற்போது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் பயங்கரவாதத்திற்கு எதிரான சட்ட வரைவு நீதி அமைச்சரினால் இன்னும் சில தினங்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணையக்குழுவின் பணிகள் குறித்தும் கலந்துரையாடப்படுகின்றது. வெளிவிவகார அமைச்சர் பாராளுமன்றத்திலும் பாராளுமன்றத்திற்கு வெளியிலும் பல அமைப்புகளுடன் கலந்துரையாடுகிறார்.
இதில் இழப்பீடு உள்ளிட்ட பல்வேறு விடயங்களும் அடங்கும். இவை தொடர்பிலும் வடக்கிலுள்ள தமிழ் எம்.பி.க்களுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது. வடக்கின் அபிவிருத்திக்காக எதிர்வரும் 10 வருடங்களில் அமுல்படுத்தப்படவுள்ள திட்டம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம்.
அதிகார பகிர்வு பற்றி பேசுவதற்காகவே இந்த மாநாடு கூட்டப்பட்டது. 13 ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ் எம்.பிக்களுடன் கலந்தாலோசித்துள்ளோம். இருப்பினும் இது முழு நாட்டிலும் தாக்கம் செலுத்தும் விடயம் என்பதால் அதுபற்றி அனைத்து தரப்புக்களுடனும் பேசி தீர்மானிக்க வேண்டிய அவசியம் உள்ளது.
நாட்டிலுள்ள 09 மாகாண சபையில் 07 மாகாண சபைகள் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பிரதேசங்களிலேயே உள்ளன. 02 மாகாண சபைகள் மட்டுமே சிறுபான்மை மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ளன. வடக்கு பகுதியில் தமிழர்கள் அதிகமாக வாழ்கின்றனர். நாம் அதிகளவிலான மாகாண சபைகளை தெற்கிலேயே செயற்படுத்தியுள்ளோம் என்ற அடிப்படையில் அதிக அனுபவங்களும் உள்ளன. எனவே அவற்றை தொடர்ந்தும் நடத்திச் செல்ல வேண்டும் எனில் அவற்றின் குறைபாடுகளை நிவர்த்திக்க வேண்டியது அவசியமாகும்.
1987 இல் கொண்டு வரப்பட்ட மாகாண சபைச் சட்டத்தில் பல்வேறு குறைப்பாடுகள் உள்னன. அவற்றின் நிர்வாக மற்றும் நிதி நிர்வாகம் தொடர்பிலான எந்தவொரு சரத்துக்களும் இல்லை. அதில் ஒரு அதிகாரி தொடர்பில் மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் மாகாண அமைச்சர்களின் அதிகாரம் பற்றி அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டில் வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாண சபை முதலமைச்சர்கள் மாகாண சபைகளுக்கு அதிக அதிகாரங்கள் வேண்டுமென கோரி அறிக்கையொன்றை சமர்பித்திருந்தனர். அதற்கு ஏழு மாகாண சபைகளினதும் எதிர்கட்சித் தலைவர்களும் ஆதரவை தெரிவித்திருந்தனர். அதற்கமையே மேற்படிச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியிருப்பதோடு, அதற்கு அவசியமான சட்டங்களை அரசாங்கம் அமுல்படுத்தும்.
குறிப்பாக பிரதேச செயலாளரை தெரிவு செய்தல் மற்றும் நீக்குதல் தொடர்பிலான அனுமதியை பெற்றுக்கொள்வதற்கான முறைமையொன்றும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அது தொடர்பிலான பிரச்சினைகள் இருக்கும் பட்சத்தில் அதனை அரச சேவை ஆணைக்குழுவிடம் தெரியபடுத்துங்கள்.
அதேபோல் கல்விச் செயற்பாடுகள் தொடர்பிலான அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு முழுமையாக பெற்றுக்கொடுத்தல் மற்றும் அனைத்து மாகாணங்களிலும் மாகாண கல்விச் சபைகளை உருவாக்குதல், தொழில் பயிற்சி நிறுவனங்கள் தொடர்பிலான அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு பெற்றுக்கொடுத்தல், 13ஆவது திருத்தத்தின் பிரகாரம் மாகாண சபைகளுக்கு பல்கலைக்கழங்களை ஆரம்பிப்பதற்கான அதிகாரங்களை வழங்குவதற்கான சட்டங்களை அமுல்படுத்துதல், விவசாயத்திற்கு அவசியமான அடித்தள சேவைகளை செயற்படுத்துதல் தொடர்பிலான விடயங்களை மாகாண சபைகளின் ஊடாக செய்துகொள்வதற்கு அவசியமான திருத்தங்களை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.
அதேபோல் அனைத்து மாகாணங்களுக்குமான சுற்றுலாச் சபைகளையும் நிறுவ வேண்டும். சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பிலான விடயங்களை, மாகாண சபை மற்றும் மாவட்டச் சபைகளின் ஊடாகவே பல நாடுகளும் முன்னெடுத்து வருகின்றன.
அதேபோல் தற்போது 10 இலட்சத்துக்கும் அதிகமான மூலதனத்தை கொண்டுள்ள வியாபாரங்கள் மாத்திரமே அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. அதனை குறைந்த பட்சம் 250 மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையாக மாற்றிக்கொள்ள அவசியம் இருக்குமாயின் அது தொடர்பிலான திருத்தங்களை பாராளுமன்றத்தில் ஆலோசிக்க இயலுமை உள்ளது. அதேபோல் அனைத்து மாகாணங்களிலும் மாவட்ட அபிவிருத்தி குழுக்களை மீள ஆரம்பிக்க முடியும்.
மாகாண சபைகளின் கீழ் இருக்க வேண்டிய பல்வேறு விடயங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகிறது. அது தொடர்பிலும் ஆலோசித்து தீர்மானங்களை மேற்கொள்ள முடியும். பொலிஸ் அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் ஆராயப்பட்டு வருகின்றது. அமுலில் உள்ள பொலிஸ் கட்டளைச் சட்டத்தை கொண்டு ஒன்றையும் செய்ய முடியாது என்ற காரணத்தினால் அதில் திருத்தத்தை மேற்கொண்டு புதிய சட்டமொன்றை கொண்டுவர வேண்டியது அவசியமாகும்.
அதேபோல், பொலிஸ் அதிகாரங்களை எவ்வாறு அமுல்படுத்தலாம் என்பது குறித்து நாம் கலந்தாலோசிக்க வேண்டும். அதன்படி பொலிஸ் அதிகாரங்கள் தவிர்ந்த ஏனைய அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு பெற்றுக்கொடுப்பது தொடர்பில் ஆலோசிக்கப்பட்ட பின்னர் அதற்கு அவசியமான சட்டத் திருத்தங்களை பாராளுமன்றத்தில் சமர்பிக்க நாம் எதிர்பார்த்துள்ளோம். அதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியமாகிறது.
மாகாண சபைகளை தொடர்ந்தும் நடத்திச் செல்வதாயின் உரிய வகையில் அதனை செய்ய வேண்டும். கடந்த 10 – 15 வருடங்களில் மாகாண மட்டத்தில் எவ்வித அபிவிருத்தியையும் காண முடியவில்லை. மாவட்ட அபிவிருத்திச் சபைகள் இருந்த காலத்தில் இதற்கு மேலான செயற்பாடுகளை காண முடிந்தது. துரித அபிவிருத்தியை நோக்கி நாட்டை கொண்டுச் செல்வதற்கான கொள்கை வகுப்பதையே அரசாங்கம் செய்ய வேண்டும். ஏனைய பொறுப்புக்களை மாகாண சபைகளிடத்தில் ஒப்படைக்க வேண்டும்.
மாகாண சபை உறுப்பினர்கள் பதவியை வகித்துக் கொண்டு பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அந்தப் பதவியை வகித்தவாரே மாகாணசபை உறுப்பினராக செயற்படுவது தொடர்பில் முன்மொழியப்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் பாராளுமன்றத்தில் கலந்துரையாடி தீர்மானத்தை எடுக்க முடியும்.
எவ்வாறாவது இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். இந்த முறைமையுடன் நாம் முன்னேறிச் செல்வதற்கான இயலுமை காணப்படுகின்றது. அதனால் ஏனைய உலக நாடுகளை போல மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை பிரித்துக் கொடுப்போம். தற்போதும் 07 மாகாண சபைகள் இயங்குகின்ற நிலையில் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் ஏனையவைகளையும் செயற்படுத்த முடியும். அது தொடர்பிலான யோசனைகளை முன்மொழியுங்கள். குறிப்பாக அது தொடர்பில் ஆலோசிப்பதற்கு சுசில் பிரேமஜயந்த, விஜேதாச ராஜபக்ஷ, பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட மூன்று அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த பணிகளில் பிரதமரும் பங்கெடுத்துக்கொள்வார்.
இரண்டு அல்லது மூன்று வாரங்களில் இதுகுறித்த யோசனைகள் எமக்கு கிடைக்குமாயின் அது தொடர்பிலான முன்மொழிவை பாராளுமன்றத்தில் சமர்பிக்க எமக்கு இயலுமை உள்ளது. அதேபோல் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரவையும், இந்த பணிகளில் இணைத்துகொள்ள எதிர்பார்ப்பதோடு, பொலிஸ் அதிகார வழங்குவதை தனியொரு திருத்தமாக சமர்பிக்க முடியும். அதேபோல் பொலிஸ் தொடர்பிலான புதிய சட்டதிட்டங்களை நாம் கொண்டுவர உள்ளோம். அதற்கு இணையாகவே மேற்படிச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.
நாம் அந்த பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும். அதற்கான சட்டங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டும். அது தொடர்பில் உங்கள் அனைவரினதும் நிலைப்பாடுகளை அறிந்துகொள்ளவே இன்றைய கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மேற்படி கலந்துரையாடலின் பின்னர் உரிய தரப்பினருடனும் கலந்தாலோசித்து மூன்று அல்லது நான்கு வாரங்களுக்குள் முடிவொன்றை மேற்கொண்டு அந்தச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல முடியும்.
அது தொடர்பிலான எனது நிலைப்பாட்டை உங்களுக்கு அறிவித்துள்ளேன். அதேபோல் அமைச்சரவைக்கும் அறிவித்துள்ளேன். இந்த செயற்பாடுகளை என்னால் தனியாக மேற்கொள்ள முடியாது. எனக்கு பாராளுமன்றத்தில் ஒரு ஆசனம் மட்டுமே உள்ளது. அதனால் இதனை நிறைவேற்றிக்கொள்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரினதும் ஒத்துழைப்புக்கள் எமக்கு அவசியப்படுகின்றது. அதனாலேயே உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்புக்களை கோருகிறேன்.
அதேபோல் மேற்படி செயற்பாட்டிற்கு அவசியமான சட்டங்களை கொண்டு வருவதற்கான அதிகாரம் எனக்கு இல்லை. எனக்கு மாத்திரமின்றி எனக்கு முன்பிருந்த 07 ஜனாதிபதிகளுக்கும் அதற்கான அதிகாரம் இருக்கவில்லை. சட்டம் தயாரிப்பதற்கான அதிகாரம் பாராளுமன்றத்திற்கு மாத்திரமே உள்ளது. அதனை சமர்பிப்பது மட்டுமே எனது பொறுப்பு. அது தொடர்பிலான யோசனைகளை பெற்றுக்கொண்டதன் பின்னர் நாம் சட்டத்தை அமுல்படுத்த முடியும்.
இந்நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு மிகக் குறுகிய காலத்தில் தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்காகவே ஜனாதிபதி பதவியை நான் ஏற்றுக்கொண்டேன். அதனால் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதா அல்லது அதனை முழுமையாக நீக்குவதா என்பது குறித்து சிந்திக்க வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
அரசியல் கட்சிகளை பலப்படுத்தும் நோக்கத்துக்கு அன்றி நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே அதிகார பகிர்வை செய்ய வேண்டும். இன்று எமது நாட்டின் முன்னேற்றத்திற்கு நாம் கூட்டாக அர்ப்பணிப்புச் செய்யத் தவறினால் எதிர்காலச் சந்ததியின் சாபத்துக்கு ஆளாக வேண்டியிருக்கும்.
அதேபோல் அரசியலமைப்பின் அதிகாரத்தை அரசியல் நோக்கங்களுக்கு அன்றி நாட்டின் அபிவிருத்திக்காகவே பயன்படுத்த வேண்டும். அதனால் அதற்காக, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்ற வகையில் ஒத்துழைப்புக்களை வழங்க எதிர்பார்த்துள்ளோம்.
கட்சி என்ற வகையில் இறுதியான யோசனைகளை நாங்கள் முன்மொழியவில்லை. அரசாங்கம் முன்வைக்கும் யோசனையை ஆராய்ந்து பார்த்த பின்னர் அதற்கு ஒத்துழைப்பு வழங்க எதிர்பார்த்துள்ளோம்.
பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம்
முன்பிருந்த எந்தவொரு ஜனாதிபதிகளும் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தாமல் இருந்தமைக்கான காரணம் இருக்கலாம். அதனை பற்றி முதலில் தேடிப்பார்க்க வேண்டும். ஒரு விடயத்தை விரைந்து செய்வதை விட சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் ஆலோசித்து செய்வது சிறந்ததாகும் என்ற வகையில், இது தொடர்பிலான விரிவான அறிக்கையை பெற்றுக்கொள்ளுங்கள் என்ற யோசனையை முன்வைக்கிறேன்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
ஒரு நாட்டின் நல்லிணக்கத்தை வலுப்படுத்த அந்த நாட்டில் வாழும் அனைத்து குடிமக்களும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். இல்லையெனில் முதலில் தேசிய பாதுகாப்புக்குத் தான் அச்சுறுத்தல் ஏற்படும்.
இன்று இந்த நிகழ்விற்கு என்னை அழைத்தமைக்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நல்லெண்ணத்துடன் தொடர்வது மிகவும் முக்கியமானது. மேலும் இது அரசியல் தந்திரமாக இருக்கக் கூடாது. அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதி இந்தப் பதவிக்கு தெரிவாகியிருக்கிறார். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் அவர் ஜனாதிபதியானார். எனவே அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஒரு அரசாங்கத்தில் முரண்பட்ட கருத்துகள் இருக்க முடியாது. நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் வேலைத்திட்டத்தில் நாம் ஒரே நிலைப்பாட்டில் இருக்க வேண்டும். மேலும் இந்த வேலைத்திட்டம் வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்பட வேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும
இங்குள்ள பெரும்பான்மையான எதிர்க்கட்சிகள் உங்கள் அழைப்பை ஏற்று சில சந்தேகங்களுடன் இங்கு வந்துள்ளன. இந்தத் திட்டம் நல்லெண்ணத்துடன் செய்யப்படுகிறதா என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது. அதிகாரப் பகிர்வுக்கான அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் எமது முத்திரையைப் பெறுமா என்பதில் எமக்கு நியாயமான சந்தேகம் உள்ளது. எங்களிடம் இருக்கும் இந்த சந்தேகத்தை நீக்கும் திறன் உங்களுக்கு மட்டுமே உள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க
இங்கு முன்வைக்கப்பட்டுள்ள யோசனை சிறந்தது. அதற்கு எவரும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது. எவ்வாறாயினும் இது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யோசனையா அல்லது தற்போதைய அரசாங்கத்தின் யோசனையா என்பதை தெளிவுபடுத்த வேண்டும், பொதுஜன பெரமுனவின் செயலாளர் ஆற்றிய உரை எங்களுக்கு மேலும் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது. அதனால் இதனை அரசாங்கத்தின் யோசனையாக சமர்பியுங்கள், அரசாங்கத்தின் வேலைத்திட்டமாக்குங்கள். அந்த வரைவை எங்களுக்கும் அறிவியுங்கள், அது தொடர்பிலான விரிவான கலந்துரையாடலுக்கு நாம் தயாராகவே இருக்கிறோம்.
குறிப்பாக பிரதமர் மற்றும் சபாநாயகரை இரு பக்கங்களிலும் அமர்த்திக்கொண்டு அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பில் ஆராய்வது மகிழ்ச்சிக்குரியது. 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவளிக்கும் கட்சியின் உறுப்பினராக இருப்பதே அதற்கு காரணம். அதற்காக உயிர்த்தியாகம் செய்த கட்சியொன்றின் உறுப்பினராவேன். அந்த வகையில் அதிகார பகிர்வு விடயத்தில் நாம் கொண்டுள்ள நிலைப்பாட்டில் கடுகளவும் மாற்றமில்லை. இது தொடர்பில் காணப்படும் தவறான கோணம் மாற வேண்டும். அதேபோல் நீங்கள் குறிப்பிட்டுள்ள விடயங்களில் வடக்கின் அபிவிருத்தி தொடர்பில் கூறப்பட்டுள்ளமை மிக முக்கியமானதாகும். அந்த மக்கள் பொலிஸ் அதிகாரத்தையோ, காணி அதிகாரத்தையோ கேட்கவில்லை. அவர்கள் வயல்களுக்கு தண்ணீரையும், வாழ்வாதாரத்திற்கான வழிமுறைகளையும் பிள்ளைகளுக்கு கல்வி வசதிகளையுமே கேட்கிறார்கள்.
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச,
அரசியலமைப்பின் 13வது திருத்தம் கொண்டுவரப்பட்ட போது, முன்னாள் பிரதம நீதியரசர் ராஜா வனசுந்தர, “13ஆவது திருத்தமானது நாட்டின் தலையில் தொங்கும் ஆபத்தான மூன்று வாள்கள் என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு எதிராக நிற்கும் அரசியலமைப்பின் மிகவும் மெலிந்த கயிற்றால் அது பிணைக்கப்பட்டுள்ளது. இந்த கயிறு வெட்டப்பட்டால் தான் உண்மையான படம் தெரிய ஆரம்பிக்கும். இது மிகவும் தீவிரமான விடயம்.
பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்
ஜனாதிபதி கூறியது போல், அதிகாரப் பகிர்வின் நோக்கம் மாகாண சபை மட்டத்திலான பிரதிநிதிகளுக்கு அதிகாரத்தை வழங்குவதாகும். எவ்வாறாயினும், தற்போது நாட்டின் ஒன்பது மாகாண சபைகளில் எதிலும் பிரதிநிதிகளை தெரிவு செய்யவில்லை. எனவே, அதிகாரப் பகிர்வு குறித்த விவாதங்கள் அர்த்தமற்றவை என்றே கூற வேண்டும். எனவே, மாகாண சபைகளில் உரிய மக்கள் பிரதிநிதித்துவம் இருக்கும் வகையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே இங்கு முக்கிய விடயமாக இருக்க வேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன்
கடந்த கலந்துரையாடலில் பிரதமர் தலைமையில் தெரிவுக்குழு அமைப்பது தொடர்பான உண்மைகளை நான் சுட்டிக்காட்டியிருந்தேன். இதன்படி, மாகாண சபைத் தேர்தலை முன்னைய விகிதாசார வாக்கு முறையின் கீழ் நடத்த பரிந்துரைக்கப்பட்டது. மேலும் முறையான எல்லை நிர்ணயம் கொண்ட கலப்பு முறைமையை நாடுவதற்கு பொருத்தமான சட்டத்தை உருவாக்குமாறு குழுவிற்கு மேலும் பரிந்துரைக்கப்பட்டது. அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுக்காக அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்த விரும்புகின்றேன். ஆனால், அதே கட்சியின் பொதுச்செயலாளர் அதிகாரப் பகிர்வு குறித்து மாறுபட்ட நிலைப்பாட்டை அறிவித்து குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்றே கூற வேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன்
அரசியலமைப்பின் 13வது திருத்தத்தில் உள்ள பெரும்பாலான அதிகாரங்களை நாம் இப்போது இழந்துள்ளோம். இதனால் தான் மாகாண சபையில் இருந்து நீக்கப்பட்டுள்ள அதிகாரங்களை மீள வழங்குமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தோம். 13ஆவது திருத்தச் சட்டத்தை தேர்தலுக்கு முன்னர் உள்ளதை விட பலமாக்குவதே எமது இலக்காகும். எனவே, 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்துவது மாகாண சபைகளை பலப்படுத்தும்.
வணக்கத்திற்குரிய அத்துரலியே இரத்தின தேரர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான கெவிது குமாரதுங்க, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, சரத் வீரசேகர, அனுர பிரியதர்ஷன யாப்பா, லக்ஷ்மன் கிரியெல்ல உள்ளிட்டோர் இங்கு பேசினர்.
பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பல்வேறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.