வைத்தியசாலைகளில் மின் துண்டிக்கப்படாது!

சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகளுக்கு அடுத்த இரண்டு மாதங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை உறுதியளித்துள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சுகாதார பிரிவினருக்கும் இலங்கை மின்சாரசபை தலைவருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இணக்கப்பாடு எட்டப்பட்டதையடுத்து, உறுதிமொழியை உறுதிப்படுத்தும் கடிதத்தை இலங்கை மின்சார சபை வழங்கியுள்ளதாக வைத்தியர் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று முன்தினம் (27.07) வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த நான்கைந்து மாதங்களாக அரச வைத்தியசாலைகளின் மின் கட்டணத்தை சுகாதார அமைச்சினால் செலுத்த முடியாதுள்ளதாகவும்,
அடுத்த இரண்டு மாதங்களுக்குள் நிலுவையிலுள்ள மின் கட்டணங்களைத் தீர்ப்பதாக உறுதியளித்ததையடுத்து, அரச மருத்துவமனைகளுக்கு மின் இணைப்பைத் துண்டிக்க மாட்டோம் என இலங்கை மின்சாரசபை இணக்கம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் நிலுவையில் உள்ள மின்சார சபையின் கட்டணங்களைத் தீர்ப்பதற்கும், ஒவ்வொரு மாதமும் மின்சாரக் கட்டணம் செலுத்தப்படுவதை உறுதிசெய்வதற்கு நிதியை வழங்குவதற்கும் திறைசேரி கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளதாக வைத்தியர் சமன் ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply