இலங்கை மின்சார சபையின் தலைவர், பொது முகாமையாளர் மற்றும் பணிப்பாளர்களுடன் இன்று (21.08) காலை விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தமது ட்விட்டர் தலத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த கலந்துரையாடலில் இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட முகாமையாளர்களுக்கான பதவி உயர்வுகள் தொடர்பாக அமைச்சின் அனுமதியைப் பெறுவதற்கும், உதவி பொது முகாமையாளர் பதவிகளுக்கான (3 ஆண்டுகள்) குறைந்தபட்ச சேவைக் காலம் குறித்து 2025 முதல் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டிருந்த, 2020 இல் எடுக்கப்பட்ட குழு முடிவை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதையபொது முகாமையாளர் அடுத்த மாதம் ஓய்வு பெறவுள்ளதால், முன் நிர்வாக அனுபவம் மற்றும் ஓய்வு பெறுவதற்கு குறைந்தபட்சம் 3 வருட சேவைக் காலம் உள்ள நபர்கள் மத்தியில் பொது முகாமையாளர் பதவிக்கு நபர்களை பரிந்துரைக்கவும் அமைச்சீன் ஒப்புதலைப் பெற தீர்மானிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை மின்சார சபையின் சீர்திருத்த செயல்முறைகள், மின் உற்பத்தித் திட்டங்கள், வள முகாமைத்துவம், நிர்வாக மற்றும் இயக்கச் செலவுகளைக் குறைத்தல் மற்றும் இலங்கை மின்சார சபையில் உள்ள சிக்கல்கள் தொடர்பாகவும் இந்த கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.