வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் மீதான மீளாய்வு ஆகஸ்ட் 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
யட்டியந்தோட்டையில் நேற்று (25.08) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் ஆகஸ்ட் 22 ஆம் திகதி வரை மீளாய்வு செய்யப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் அடுத்த ஆண்டும் சவாலான பட்ஜெட்டையே தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும், நாட்டின் பொருளாதாரத்தை வங்குரோத்து நிலையில் இருந்து சாதகமான பொருளாதாரத்தை நோக்கி நகர்த்துவதற்கு தேவையான வசதிகளை வழங்கும் வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.