மனிதனின் நெருங்கிய தோழனாக இருக்கும் நாய்களுக்கான தினமாக இன்றைய தினம் ஒதுக்கப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியில் நாய்கள் தினம் இன்று (26.08) கொண்டாடப்படுகிறது. சந்தோஷமாக இருக்கும் போதும், சோகமாக இருக்கும்போதும் மனிதனின் உணர்வுகளை உணர்ந்து எப்போதும் கூடவே இருக்கும் ஐந்தறிவு கொண்ட ஆருயிர் நண்பன் தான் இந்த நாய்கள்.
நாய்களை கொண்டாடுவதை நோக்கமாகக்கொண்டு இன்று (26.08) கொழும்பு விஹாரமாதேவி பூங்காவில் நாய்களுக்கான திருவிழா எனும் பெயரில் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
காலை முதல் மாலை வரை இடம்பெற்ற இந்நிகழ்வுகளில், நாய்கள் விளையாடுவதற்கான விசேட விளையாட்டு பகுதி, மருத்துவ வசதிகள், நாய்களுக்கான அழகுநிலையங்கள், உணவகங்கள், என பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
மேலும், அதிக எடை கொண்ட நாய், அதிக உயரம் கொண்ட நாய்கள், மிகவும் சிறிய நாய்கள் என பல பிரிவுகளில் விதவிதமான போட்டிகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
இந்நிகழ்வுக்கு தங்கள் செல்லப்பிராணி நாய்களுடன் வந்த பலரும், போட்டிகளில் தங்கள் வளர்ப்பு நாய்களை பங்கேற்க செய்து பரிசில்களையும் பெற்றுச்சென்றனர்.
தங்கள் செல்லப்பிராணிகளை அலங்கரித்து அழைத்து வந்து, புகைப்படங்கள் எடுத்துக்கொண்டதுடன், அழகிய நாய்களுக்கான போட்டிகளிலும் கலந்துகொள்ள வைத்திருந்தனர். நிகல்வுகள் அனைத்தும் பார்வையாளர்களை கவரும் வண்ணம் அமைந்திருந்தன.