தீவின் 09 மாவட்டங்களில் இன்று (28.08) வெப்பச் சுட்டெண் மனித உடல் அவதானிக்க வேண்டிய மட்டத்தில் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, அநுராதபுரம், பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் இன்று வெப்பச் சுட்டெண் 39 முதல் 45 செல்சியஸ் வரையில் காணப்படும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலையில், போதுமான அளவு தண்ணீர் அருந்தவும், முடிந்தவரை நிழலான இடங்களில் தங்கவும், சிறு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்துமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
சூரியன் தெற்கே தெரியும் நகர்வின் போது இன்று முதல் செப்டெம்பர் 07 ஆம் திகதி வரை இலங்கைக்கு அண்மித்த அட்சரேகைகளுக்கு நேர் மேலே காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, வறண்ட காலநிலையுடன், நாடளாவிய ரீதியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 290,000 ஐ தாண்டியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
தீவின் 19 மாவட்டங்களில் 84,646 குடும்பங்களைச் சேர்ந்த 291,720 பேர் வறட்சியான காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.