அடுத்த மாதம் இந்தியா, டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டில் தாம் கலந்து கொள்ளப் போவதில்லை என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அறிவித்த்துள்ளார்.
செப்டம்பர் 9 முதல் 10 வரை இந்தியாவின் தலைநகரான டெல்லியில் இந்த வருடத்திற்கான ஜி 20 உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.
தனக்கு பதிலாக ரஸ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவ்ரோவ் தன் சார்பில் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வார் என இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பை மேற்கொண்ட போது புட்டின் தெரிவித்திருந்தார்.
மேலும் இரு தலைவர்களும் உலகளாவிய பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடினர் என இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் வேலைப்பழு காரணமாக கலந்து கொள்ளவில்லை என
ரஷ்ய அரசாங்க ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இருப்பினும் உக்ரைனில் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு புட்டினை கைது செய்ய ஐசிசி பிடியாணை பிறப்பித்துள்ள நிலையிலேயே வீடியோ இணைப்பின்முலம் ஜொகனஸ்பேர்க்கில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டார் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த மாநாட்டில் உக்ரைன் மீதான ரஸ்சியாவின் போர் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டில் உருவாக்கப்பட்டதே பிரிக்ஸ் அமைப்பு.
இந்தியாவில் நடைபெறவுள்ள G20 மாநாடானது உலகின் 19 செல்வந்த நாடுகளையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் உள்ளடக்கியது. வருடாந்தம் உறுப்பினர்களிடையே தலமைபொறுப்பு மாற்றமடைவதோடு தற்போது இம்மாநாட்டின் தலமைப்பொறுப்பு இந்தியாவிடம் காணப்படுகிறது.
டெல்லியில் நடைபெறவுள்ள உச்சி மாநாட்டில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுணக் கலந்துகொள்ளவிருக்கும் நிலையில் உக்ரைன் மீதான ரஸ்யாவின் படையெடுப்பு பேசுபொருளாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.