சமயங்களை இழிவுபடுத்தும் விதத்தில் தனது போதனையின் போது கருத்து வெளியிட்ட போதகர் ஜெரோம் பெர்னான்டோ தன்னை பொலிஸார் கைது செய்யாமல் தடுக்க கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரீட் மனு மீதான விசாரணை பிற்போடப்பட்டுள்ளது.
இன்று(31.08) குறித்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை நடாத்துவதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேபனைகளே நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்துக்கு சுட்டிக்காட்டப்பட்டதனை தொடர்ந்து 21 ஆம் திகதி வழக்கு விசாரணை செய்யப்படுமென நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த மே மாதம் 18 ஆம் திகதி நடைபெற்ற போதனை ஒன்றின் பொது பௌத்த, இந்து, இஸ்லாம் மதங்களை இழிவுபடுத்தி கருத்துக்களை ஜெரோம் பெர்னான்டோ கூறியிருந்தார். இதற்கு பலரும் ஆட்சேபனைகளை வெளியிட்ட அதேவேளை ஜெரோம் பெர்னாண்டோவை கைது செய்யுமாறு முறைப்பாடுகளை செய்தனர். இருப்பினும் அதற்கு முன்னரே ஜெரோம் பெர்னாண்டோ நாட்டை விட்டு வெளியேறியிருந்தார். அவர் போதனைகளுக்காக வெளிநாடு சென்றதாகவும் மீண்டும் நாடு திரும்புவார் என கூறப்பட்ட போதும் இதுவரை நாடு திரும்பவில்லை.
அவரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நாடு திரும்பினால் கைது செய்யப்படுவார். அதனை தடுக்கும் முகமாகவே நீதிமன்றத்தில் ரீட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வு துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணைகளை ஆரம்பித்ததுள்ளது.