இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பிலான சாட்சியங்கள் அடங்கிய ஆவண படம் ஒன்றை இங்கிலாந்தின் சனல் 04 ஊடகம் நாளை(05.09) வெளியிடப்போவதாக அறிவித்துள்ளதாக இங்கிலாந்து டைம்ஸ்UK ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டு தாக்குதல் தொடர்பில் அப்போதைய இராணுவ புலனாய்வு உயர் அதிகாரி சுரேஷ் சாலி மற்றும் ISIS தீவிரவாதிகளுக்கும் இடையில் சந்திப்பை ஏற்படுத்தி கொடுத்தவரான, சிவநேசதுரை சந்திகாந்தன்(பிள்ளையான்) குழுவை சேர்ந்த மௌலானா எனும் நபரே இந்த தகவல்களை வழக்கியதாகவும், அதன் அடிப்படையிலேயே சனல்04 ஆவணப் படத்தை தயார் செய்துள்ளதாகவும் மேலும் தகவல் வெளியாகியுள்ளது.
2015 ஆம் ஆண்டு ஆட்சியை இழந்த ராஜபக்ஷ குடும்பம், நாட்டில் குழப்ப நிலையை ஏற்படுத்தி அசாதரண சூழலை உருவாக்குவதன் மூலம் கோட்டாபய ராஜபக்ஷவை வெற்றி பெற வைக்க முடியுமென்ற திட்டத்தின் அடிப்படையில் குறித்த குண்டு தாக்குதலை திட்டமிட்டதாகவும் சந்திப்பின் பின்னர் சுரேஷ் சாலி தனக்கு கூறியதாக ஹன்ஷீர் ஆஷாட் மௌலானா கூறியதாக மேலும் வெளியாகியுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது. அத்தோடு இந்த தாக்குதல் திட்டம் ஓரிரு நாளில் மேற்கொள்ளப்பட்டதல்ல எனவும், இரண்டு-மூன்று வருடங்களாக திட்டமிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடைபெற்ற இந்த தாக்குதலில் 8 இங்கிலாந்தவர்கள் அடங்கலாக 43 வெளிநாட்டவர்கள் உட்பட 250 பேர் கொல்லப்பட்டிருந்தனர். இந்த தாக்குதல் தொடர்பில் உரிய விசாரணைகள் நடைபெறவில்லை என கத்தோலிக்க உயர் பீடம் அடங்கலாக பலர் விசனம் தெரிவித்து வருகின்றனர்.
மௌலானா கடந்த ஆண்டு இலங்கையை விட்டு வெளியேறி ஐரோப்பிய புலனாய்வு அமைப்புக்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையிடம் தனது சாட்சியத்தை முன்வைத்துள்ளார் என ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் குறித்த அமைப்புகள் அவரது கூற்றுகளை நம்பகமானதாகக் கருதி விசாரணை நடத்தி வருகின்றனர் என்னவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
மௌலானாவின் கருத்துக்கள் உண்மையென கூறியுள்ள ஒரு உயர் அரச அதிகாரி, சுரேஷ் சாலியின் குண்டுத்தாக்குதல் தொடர்பிலான தொடர்புகள் குறித்து குண்டுத்தாக்குதலின் முன்னரும், பின்னரும் புலனாய்வு துறையினர் தகவல்கள் வழங்கிய போதும், கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததன் பின்னர் விசாரணையுடன் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் இடம்மாற்றப்பட்டதாகவும் விசாரணைகள் உரிய முறையில் நடைபெறாமல் தடுக்கப்பட்டதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார் எனவும் அந்த ஆதாரமும் வெளியாகவுள்ள ஆவணப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக செய்தியில் கூறப்பட்டுள்ளது.
பிள்ளையானுக்கும் இந்த தாக்குதல் சம்பவங்களில் தொடர்புள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகளை பிள்ளையான் செய்ததாகவும் பிள்ளையானின் நெருங்கிய சவாக இருந்த மௌலானா கூறியுள்ளதாக டைம்ஸ்UK தனது செய்தியில் மேலும் கூறியுள்ளது. அத்தோடு பிள்ளையான் “மரணம்” “மரணம்” “மரணம்” என்பதிலேயே குறிக்கோளாக இருந்ததாக கூறியதாகவும், “நாங்கள் அவர்களைப் பயன்படுத்தலாம், அவர்கள் உலகில் எதிலும் ஆர்வம் காட்டவில்லை” என பிள்ளையான் கூறியதாகவும் மௌலானா கூறினார் என செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்த குற்றாச்சாட்டுகள் தொடர்பில் அரச புலனாய்வு துறையின் பிரதானியான சுரேஷ் சாலி “தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஆதரமற்றவை எனவும், பொய்யானவை” என எழுத்து மூலமாக சனல்04 ஊடகத்துக்கு தெரிவித்துள்ளதாகவும், தன் மீது குற்றம் சுமத்தப்பட்ட காலப்பகுதியில் தான் நாட்டில் இருக்கவில்லை எனவும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளதாக டைம்ஸ் UK ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குண்டு தாக்குதல் விசாரணைகள் முடிவடைந்து அறிக்கை அப்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவிடம் கையளித்த போதும் அதனை வெளியிட அவர் மறுத்தார் எனவும், வெளியாகியுள்ள செய்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் பிள்ளையான் மற்றும் ராஜபக்ஷ குடும்ப அங்கத்தவர்களை தொடர்பு கொள்ள சனல்04 முயன்ற போதும் அவர்கள் பதிலளிக்கவில்லை எனவும் வெளியாகியுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.