கருங்கடல் தானிய ஒப்பந்தம் நீட்டிக்கப்படாது – புட்டின் திட்டவட்டம்!

தங்களது வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை மேற்கத்திய நாடுகள் அனுமதிக்காத வரை, உக்ரைனுடனான தானிய ஒப்பந்தம் மீண்டும் அமுற்படுத்தப்படாது என்று ரஷ்ய அதிபா் விளாடிமிர் புடின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.  

உணவுப் பற்றாக்குறை நிலவி வரும் ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளுக்கு உக்ரைனிலிருந்து கருங்கடல் வழியாக தானியங்களைக் கொண்டு செல்வதற்கான குறித்த ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பதாக ரஷ்யா கடந்த ஜூலை மாதம் அறிவித்தது. 

இது குறித்து துருக்கி அதிபா் எா்டோகனுடன் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்ட பிறகு விளாடிமிர் புட்டின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”உக்ரைனுடன் தானிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டபோது, ரஷ்யாவிலிருந்து உணவுப் பொருள்கள், உரம் ஆகியவற்றை உலகின் பிற நாடுகளுக்கு எடுத்துச் செல்வதற்கு அனுமதிப்பதாக உறுதியளிக்கப்பட்டது.  

ஆனால், அந்த உறுதிமொழியை மேற்கத்திய நாடுகள் நிறைவேற்றவில்லை. இதன் காரணமாகவே அந்த ஒப்பந்தத்தை நிறுத்திவைத்தோம். தாங்கள் கூறியபடி ரஷ்ய வேளாண் பொருட்களின் ஏற்றுமதிக்கு மேற்கத்திய நாடுகள் அனுமதி அளிக்காத வரை தானிய ஒப்பந்தம் மீண்டும் அமுற்படுத்தப்படாது. 

அத்தகைய ஏற்றுமதிக்கு மேற்கத்திய நாடுகள் வழிவகை செய்தால் அடுத்த சில நாட்களிலேயே ரஷிய-உக்ரைன் தானிய ஒப்பந்தம் அமுற்படுத்தப்படும் ” எனக் கூறியுள்ளார். 

Social Share

Leave a Reply