நல்லாட்சி காலத்தில் தான் இனப்பிரிச்சினையை தீர்ப்பதற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டன!

ஐக்கிய தேசியக் கட்சியின் 77ஆவது ஆண்டு விழா இன்று (06.09) சுகாதார வழிமுறைகளை பின்பற்றி கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெறுகிறது.

இந்நிலையில் கட்சியின் தலைவரும் முன்னாள் ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலில் நாட்டுக்காக தொடர்ந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றுவோம் என ஜனாதிபதியினால் சமகால பொருளாதார நெருக்கடிகளுக்கு தொழிற்சங்க ரீதியாக தீர்வு காண மூவர் கொண்ட விசேட குழுவின் உறுப்பினரும் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளார் எஸ்.ஆனந்தகுமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ”இலங்கையின் பழையானதும் நாட்டுக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்ததும் ஐக்கிய தேசியக் கட்சிதான். இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்கவின் காலம்முதல் இன்றைய தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் காலம்வரை நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் ஐ.தே.க அர்ப்பணிப்புடன் பணியாற்றிய வருகிறது.

நாட்டில் வாழும் தமிழ், சிங்களம், முஸ்லிம் என அனைத்தின மக்களுக்கும் இனம், மதம் என்ற பாகுபாடின்றி பணியாற்றியுள்ள ஐ.தே.க, முற்போக்குவாத கருத்துகளையே அனைத்து சந்தர்ப்பங்களிலும் பின்பற்றியுள்ளது. 1977ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்தன அறிமுகப்படுத்திய திறந்த பொருளாதாரத்தின் ஊடாகதான் எமது நாடு பாரிய அபிவிருத்தியை நோக்கி நகர ஆரம்பித்தது.

அதேபோன்று முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் நாடு முழுவதும் கைத்தொழில் பேட்டைகள் உருவாக்கப்பட்டதன் விளைவாகதான் தற்போதைய கொரோனா காலத்திலும் ஆடை ஏற்றுமதியை மேற்கொண்டு அந்நிய வருவாயை எம்மால் ஈட்ட முடிந்துள்ளது.

1994ஆம் ஆண்டு கட்சியின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்றுக்கொண்ட ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்ற ஒரு தலைவராக கடந்த 28ஆண்டுகளாக கட்சியை வழிநடத்தி வருகிறார். இவர் பிரதமராக இருந்த சந்தர்ப்பங்களில்தான் எமது நாடு சர்வதேச நாடுகளுடனான இராஜதந்திர உறவுகளை மிகவும் பலப்படுத்தியுள்ளது.

தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பதிலும், மலையக மக்களுக்கான அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகளை பெற்றுக்கொடுப்பதிலும் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐ.தே.க ஆட்சியை கைப்பற்றிய அனைத்து சந்தர்ப்பங்களிலும் அர்ப்பணிபுடன் செயற்பட்டுள்ளது.

இலங்கை சுதந்திரமடைந்து ஏழு தசாப்தங்களின் பின்னர் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில்தான் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான ஆக்கப்பூர்வமான நகர்வுகள் இடம்பெற்றிருந்தன. அதேபோன்று மலையகமெங்கும் தனிவீடுகளும் கட்டப்பட்டன. 2019ஆம் ஆண்டில் ஐ.தே.க தலைமையிலான அரசாங்கம் மீண்டும் அமையப்பெற்றிருந்தால் தமிழ் பேசும் மக்களுக்கு பரந்தப்பட்ட அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டிருக்கும். பேரினவாதத்தின் சூழ்ச்சியால் நாம் தோல்விகண்டிருந்தோம். ஆனால், மீண்டும் ஐ.தே.கவால்தான் நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.

இன்று 77ஆவது ஆண்டில் நாம் காலடி எடுத்து வைக்கிறோம். எமது தலைவர் மற்றும் பிரதித் தலைவரின் நம்பிக்கைக்குரிய ஒரு பாத்திரமாக கட்சியில் நான் செயல்பட்டு வருகிறேன். ஐ.தே.க ஆட்சி மீண்டும் அமைந்ததும் தமிழ் பேசும் மக்களுக்கு அயராது எனது பணிகளை முன்னெடுப்பேன். அதேபோன்று எனது மாவட்டமான இரத்தினபுரியில் வாழும் பெருந்தோட்ட மக்கள் அனைவருக்கும் கட்சி பேதங்கள் கடந்து எனது பணிகள் இடம்பெறும். இதற்காக இரத்தினபுரி மாவட்ட மக்களின் பூரண ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply