க.பொ.த உயர்தர பெறுபேறுகளில் சிறந்த சித்திகளை பெற்றுள்ள மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவிப்பதுடன், இரத்தினபுரி மாவட்டத்திலும் மலையகப் பகுதிகளிலும் இம்முறை சிறந்த பெறுபேறுகள் பதிவாகியுள்ளதாக ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் மூவர் அடங்கிய குழுவின் உறுப்பினர் எஸ்.ஆனந்தகுமார் கூறியுள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ”இம்முறை வெளியாகியுள்ள க.பொ.த உயர்தர பெறுபேறுகள் மகிழ்ச்சிகரமானதாக உள்ளது. மிகவும் கடினமான சூழலில் நாட்டின் மாணவர்கள் கல்வி கற்றதுடன், பல்வேறு இடர்களுக்கும் அவர்கள் முகங்கொடுத்திருந்தனர்.
கொவிட் தொற்று, பொருளாதார நெருக்கடி, அரசியல் நெருக்கடிகளால் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன. கடினமான சூழலை மாணவர்கள் எதிர்கொண்டிருந்த போதிலும், தமது கற்றல் செயல்பாட்டில் இருந்து அவர்கள் விலகவில்லை.
குறிப்பாக மலையக பகுதிகளில் மாணவர்கள் இம்முறை சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்திலும் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர். அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவிப்பதுடன், அவர்களின் எதிர்காலத்தை சிறந்த முறையில் மாற்றியமைத்துக்கொள்வதற்கான ஆலோசனைகளை தமது ஆசிரியர்கள் அல்லது பெரியோரிடம் கேட்டு செயல்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.